இதுதான் தோனிக்கான நேரம்.. சிஎஸ்கே அணியை பார்த்தால் ஒன்று தோன்றுகிறது.. நெருப்பை பற்ற வைத்த உத்தப்பா!
மும்பை: சிஎஸ்கே அணிக்காக களமிறங்கும் கடைசி தருணம் தோனிக்கு இறுதியாக கைகூடி இருப்பதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் மீது முதலீடு செய்துள்ள சூழலில், தோனி ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியாக நேரம் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஃபார்முலாவில் இருந்து சிஎஸ்கே அணி விலகி, புதிய வியூகத்தை அமைத்துள்ளது. வழக்கமாக அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிஎஸ்கே, இம்முறை சிறிய அனுபவம் போதுமானது என்று இளம் வீரர்களை அதிகமாக வாங்கி குவித்துள்ளது. அதேபோல் சில சீனியர்கள் போதும் என்று முடிவு செய்து சஞ்சு சாம்சன், ருதுராஜ், சிவம் துபே ஆகியோரை வைத்திருக்கிறது.

இதில் தோனி மட்டுமே 44 வயதில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க உள்ளார். தற்போது சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ள கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் உள்ளிட்டோர் தோனி தன்னுடைய முதல் ஐபிஎல் சீசனில் ஆடிய போது பிறந்தவர்கள். முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்குவதால், தோனி இந்த சீசனின் போதே ஓய்வை அறிவிப்பார் என்று கருதப்படுகிறது.
அதற்கேற்ப தோனியின் இடத்தை நிரப்பும் வகையில் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் ஏலத்தை முடித்துவிட்டு ஃபிளமிங் பேசுகையில், நிச்சயமாக ஏதோவொரு கட்டத்தில் தோனி ஓய்வை அறிவிக்க வேண்டிய சூழல் வரும். நிச்சயமாக தோனியின் இடத்தை நிரப்பவே சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ளார். இளம் வீரர்களிடம் முதலீடு செய்வதற்கு சில காரணங்கள் உள்ளது.
அடுத்த 6 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் நிலையை யோசித்தே இந்த நகர்வை மேற்கொண்டுள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளுக்கான திட்டம் என்று எதையும் சிந்திக்கவில்லை என்று கூறினார். இதன் மூலமாக தோனியின் ஓய்வு தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசுகையில், ஐபிஎல் 2026 ஏலமே தோனிக்கான முக்கிய மெசேஜ் என்று பார்க்கிறேன்.
தோனி தன்னுடைய பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாகவே சக நிர்வாகிகளிடமும், வீரர்களிடமும் கொடுத்து வருகிறார். ஜடேஜா கேப்டன்சி மீண்டும் தோனி வசம் சென்றபோது, பொறுப்புகள் ருதுராஜ் நோக்கி செல்வதை பார்த்தோம். தற்போது சிஎஸ்கே அணியை பார்க்கும் போது, இதுதான் தோனிக்கான நேரம் என்று தோன்றுகிறது. தோனி தனது முதல் சீசனில் ஆடிய போது, தற்போதைய சிஎஸ்கே வீரர்கள் பலரும் குழந்தைகள் தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications