சச்சினை மட்டும் விமர்சிச்சாங்களே.. கோலியும்தான் செஞ்சுரிக்கு ஆடுறாரே? ஏன்? பின்னணியில் வேற காரணம்!
சென்னை: கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மீது வைக்கப்பட்ட பெரிய விமர்சனம் ஒன்று.. இப்போது கோலி மீதும் வைக்கப்படுகிறது. அது என்ன விமர்சனம்? கோலி செஞ்சுரி அடித்தும் கூட விமர்சனம் செய்யப்படுவது ஏன்? வாருங்கள் பார்க்கலாம்!
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் இரண்டு முக்கியமான வீரர்கள்... ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இன்னொருவர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்த போது.. இந்த சாதனையை அடிக்க ஒருவன் பிறந்துதான் வர வேண்டும் என்று பலரும் கூறினர். 2012ல் சச்சின் அந்த செஞ்சுரியை அடித்த போது யாருக்கும் தெரிந்திருக்காது.. இன்னும் 11 வருடங்களில் இன்னொருவன் வந்து அந்த சாதனையை சமன் செய்வான் என்று!

அந்த இன்னொருவன் விராட் கோலி . சச்சினின் 49 ஒருநாள் சதம் என்ற சாதனையை ஈடன் கார்டனில் நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் கோலி சமன் செய்தார். ஒருவர் கிரிக்கெட் உலகின் கடவுள்.. இன்னொருவர் கிரிக்கெட் உலகின் கிங். வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ.. என்று சொல்வது போல சச்சின் சாம்ராஜ்ஜியத்தில் அடுத்த இந்தியர் அரியணை ஏறி உள்ளார்.
இப்படி கோலி மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ள நிலையில்தான் அவர் மீது கடுமையான விமர்சனம் ஒன்று வைக்கப்படுகிறது. சச்சின் மீது வைக்கப்பட்ட அதே விமர்சனம்.. இப்போது கோலி மீதும் வைக்கப்படுகிறது. அது என்ன விமர்சனம்? கோலி செஞ்சுரி அடித்தும் கூட விமர்சனம் செய்யப்படுவது ஏன்?
சச்சின் விமர்சனம்: சச்சின் மீது அப்போதும் சரி.. இப்போதும் சரி.. வைக்கப்படும் ஒரு விமர்சனம் என்றால் அது அவரின் செஞ்சுரி பேட்டிங்தான். அவர் சதம் அடிக்க வேண்டும் என்று ஆடினார். அணியின் வெற்றிக்காக ஆடவில்லை, அவர் ஆடுவது எல்லாம் தனிப்பட்ட சாதனை, மைல்கல்லை எட்ட வேண்டும் என்றுதான். மற்றபடி இந்தியாவின் வெற்றி அவரின் கண் முன் தெரியவில்லை என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்படும்.
100 சதங்களில் சச்சின் 53 சதங்களை வெற்றி பெற்ற ஆட்டங்களில் (winning cause) அடித்தும் கூட இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 சதவிகிதம் போட்டிகளில் இவர் சதம் அடித்தால் வெற்றி என்ற நிலையில்தான் சச்சின் மீது இப்போதும் சுயநலக்காரர் விமர்சனம் வைக்கப்படுகிறது.
இப்போது கோலி மீதும் விமர்சனம்: அவர் மீது அந்த விமர்சனத்தை வைத்த கிரிக்கெட் உலகம் தற்போது கோலி மீதும் அதே விமர்சனத்தை வைக்கிறது. இதற்கு முன்பு இந்த விமர்சனம் கோலி மீது வைக்கப்படவில்லை என்றாலும்.. இந்த உலகக் கோப்பை சீசனில் திடீரென அடிக்கடி வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவரின் இன்னிங்ஸ் வேகம். கோலி மெதுவாக ஆடுகிறார்.. இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதை விட.. அவரின் செஞ்சுரி முக்கியம் என்று நினைத்து ஆடுகிறார் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.
அணியின் ரன் ரேட் பற்றி கவலை இல்லாமல் அவர் செஞ்சுரி வேண்டும் என்று ஆடுகிறார் என்று விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்படுகின்றன. முக்கியமாக நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் சதம் 121 பந்தில் 83 ஸ்டிரைக் ரேட்டில் 101 அடித்தது, அதற்கு முன் வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த சதம், நியூஸிலாந்துற்கு எதிராக அவர் அடித்த 95 ரன்கள் ஆகியவைதான் இந்த விமர்சனங்களுக்கு காரணம். இந்த போட்டிகளில் அவர் சதம் அடித்தாலும்.. இந்தியா வென்றாலும் கூட கோலி சுயநலமாக ஆடியதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால் கோலியின் இந்த ஆட்டத்திற்கு பின்.. அவர் இந்த ஸ்டிரைக் ரேட்டில் செஞ்சுரி அடிப்பதற்கும் பின் சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
என்ன காரணம்?:
1. நேற்று மேட்சில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக, கடினமாக இருந்தது. முக்கியமாக ஸ்பின் பவுலிங்கில் பந்து நின்று வந்தது. இதில் அவசரமாக ஆட கூடாது. ஆடினால் விக்கெட்தான். அதனால்தான் ஷ்ரேயாஸ் - கோலி இருவரும் நிதானமாக ஆடினர். நேற்று இவர்கள் ஆடியதை விட ஸ்மார்ட்டாக பேட்டிங் செய்திருக்க முடியாது.
2. கோலி நினைத்து இருந்தால் அவரும் வேகமாக ஆடி இருக்கலாம். ரோஹித் சரவெடி தொடக்கம் கொடுத்தாலும் அவர் ஆடியது பாஸ்ட் பவுலிங்கில். அதன்பின் ஸ்பின் பவுலிங்கில்தான் பிட்ச் மாறியது. பந்து அதிகம் நின்று வந்தது. நேற்று கோலியும் ரோஹித் போல் ஆடினால் சிக்கல் ஏற்பட்டு இருக்கும். தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்து.. இந்தியா 200-250 ரன்களுக்கு சுருண்டு இருக்கும். அதை கோலி தடுத்தார். சச்சின் பலமுறை இந்திய அணியை இப்படித்தான் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி சரிவில் இருந்து மீட்டார்.
3. பொதுவாக அணியில் ஒரு வீரர் செஞ்சுரி அடித்தால்.. அந்த செஞ்சுரி என்பது எதிரணிக்கு பிரஷரை கொடுக்கும். உதாரணமாக கோலி அடித்த 79 செஞ்சுரிகளில் அவர் 53 முறை செஞ்சுரி அடித்த போதெல்லாம் இந்தியா வென்றுள்ளது. அவரின் "செஞ்சுரி victory cause" மிக அதிகமாக உள்ளது. அவர் செஞ்சுரி அடித்தால் இந்திய அணியின் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகம்.. எதிரணிக்கு சைக்காலஜி ரீதியாக பிரஷர் கூடும். அப்படி இருக்க கோலி செஞ்சுரிக்கு ஆடியது சரியானதே. சச்சினும் இதைத்தான் இந்திய அணிக்காக பலமுறை செய்தார்!
4. ஒருவர் செஞ்சுரி அடித்தால் மொத்த அணியின் ஸ்கோர் கூடும்.. 230 அடிக்க வேண்டிய இடத்தில் எளிதாக 330 ரன்களை ஒரு செஞ்சுரி கொடுக்கும். சச்சின் பல முறை இந்திய அணி 200+ ரன்கள் எடுக்க தனது செஞ்சுரி மூலம் வழி ஏற்படுத்தினார். அதைத்தான் இப்போது கோலியும் செய்கிறார். இருவரின் அணுகுமுறையும் வேறு மாதிரி இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
5. இதுபோக அணியில் கோலிக்கு கொடுக்கப்பட்டு ரோல் இதுதான். இந்திய அணியில் ஆங்கர் ரோல் சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கோலி. - ரோஹித் - கே எல் ராகுல் மூவரில் ஒருவர் கண்டிப்பாக ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ரோஹித் வேகமாக தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார் என்றால் அதன்பின் கோலி மெதுவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை இருக்க வேண்டும். எதிரே விக்கெட் சென்றாலும் மெதுவாக ஆடி ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணியில் இந்த ஆங்கர் ரோல் இத்தனை காலம் மிஸ்ஸானது. அது மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதனால்தான் எதிரே விக்கெட் விழுந்தாலும் கோலி முடிந்த அளவு நிதானமாகவே ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வருகிறார். ரன் ரேட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. டீம் மொத்தமாக சரியாமல் பார்த்துகொள்ளங்கள் என்ற ரோல்தான் கோலிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தான் நேற்று ரோஹித்தும்.. கோலி ஆடியது போல இந்த பிட்சில் ஆடுவது கடினம் என்று கூறி பாராட்டி இருந்தார்.
6. சச்சின் ஸ்டிரைக் ரேட் செஞ்சுரி அடிக்கும் நேரத்தில் ஸ்லோவாக இருக்கும். அதன்பின் செஞ்சுரி அடித்ததும் உயரும். 90-100 ரன்கள் சமயத்தில் ஸ்லோவாக இருக்கும். பின்னர் அவர் ஸ்டிரைக் ரேட்டை உயர்த்துவார். இழந்த ஸ்டிரைக் ரேட்டை மீட்பார். கோலிக்கு எல்லா சமயங்களிலும் அப்படி ஸ்டிரைக் ரேட் குறைவது இல்லை. 90 கடந்தும் அவர் வேகமாக ஆடுகிறார். ஆனாலும் அவர் கடந்த சில போட்டிகளில் மெதுவாக ஆட காரணம்.. இயல்பாக வரும் பிரஷர். 0 ரன்னில் இருக்கும் போது ஆப் தி மார்க் செல்ல வேண்டும் என்ற பிரஷர் இருப்பது போலவே 90ல் இருக்கும் போது செஞ்சுரி பிரஷர் இருக்கும். அதை சமாளிக்க முடியாமலே ராகுல், கில், ஷ்ரேயாஸ் 80 கடந்து அவுட் ஆகிறார்கள்.. ஆனால கோலி, சச்சின் அதை சதமாக மாற்றுகிறார்கள்.
7. ஒருவர் செஞ்சுரி நோக்கி ஆடினால் மொத்த அணியை சரிவில் இருந்து மீட்கலாம். உதாரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோலி ஆட்டம், நியூசிலாந்துக்கு எதிரான கோலி ஆட்டம் இதற்கு உதாரணம். அவர் அடித்த 80+ ஸ்கோர்கள்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நேற்றும் கூட தென்னாப்பிரிக்காவோடு ஒப்பீடு செய்த பின்பே எவ்வளவு கடினமான பிட்சில் கோலி உறுதியாக நின்று சதம் அடித்தார்.. அந்த சதத்தின் மதிப்பு என்ன என்பது பலருக்கும் புரிந்திருக்கும்.
8. இதெல்லாம் போக டி 20 கால ரசிகர்கள் வேகமாக இன்ஸ்டன்ட் செஞ்சுரி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது ஒன் டே பாஸ்... கொஞ்சம் லேட்டாதான் வரும்.
கோலி சிங்கிள் தவறு: கோலி மீது வைக்கப்படும் ஒரே நியாயமான குற்றச்சாட்டு சென்றால் செஞ்சுரிக்காக அவர் ஸ்டிரைக் வைக்க விரும்பி சிங்கிள் எடுக்காமல் இருக்கிறார். சச்சின் இப்படி செய்ததே இல்லை. ஆனால் வங்கதேசம் போட்டியிலும் சரி.. அதற்கு அடுத்த நியூசிலாந்து போட்டியிலும் சரி வெற்றி இலக்கு குறைவாக இருந்து ஓவர்கள் அதிகம் இருந்த காரணத்தாலேயே கோலி இந்த ரிஸ்க்கை எடுத்தார். இது அணியின் தோல்விக்கு வழிவகுக்காது என்றாலும்.. ஒரு டீம் வீரராக கோலி சிங்கிள் எடுக்காமல் இருப்பது என்னவோ தவறுதான்!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications