இந்த பொம்பளைங்களுக்கு முறுக்கு வாங்கி கொடுத்து அமைதியாக்குங்க.. மேடையில் டென்ஷனான நாஞ்சில் சம்பத்!
நெல்லை: திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நாஞ்சில் சம்பத் திடீரென அங்கிருந்த பெண்களால் டென்ஷனான சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. "பொம்பளைகளுக்கு முறுக்கு வாங்கி கொடுத்து அமைதியாக்குங்க.. இதுக்குதான் அவங்களை கூப்பிட வேண்டாம்னு சொன்னேன்" என்று நாஞ்சில் சம்பத் பேசி இருப்பது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளினை முன்னிட்டு நெல்லை தச்சநல்லூரில் உள்ள மத்திய மாவட்ட திமுக சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சிறந்த அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அப்போது நாஞ்சில் சம்பத் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை நடத்தி பிரதமர் மோடிக்கு முடிவு கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

இந்தியாவில் பாசிசம் நடைமுறையில் உள்ளது. எமர்ஜெனசி அமல்படுத்தியதை விட மிகப்பெரிய கொடுமை நடக்கிறது. இந்தியாவை தாங்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று பாசிஸ்ட்கள் நினைத்து கொண்டு எதிரிகளை அகற்ற நினைக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வடை பிரச்சார யுத்தத்தை நடத்த வேண்டிய தேவை உள்ளது.
இந்தியாவே ஏற்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் மட்டும் ஏற்கவில்லை என்று தமிழிசை கூறுகிறார். பாஜகவின் கைகளில் ஆட்சி அதிகாரம் இருப்பதால், தமிழக ஆட்சியை பறிக்க நினைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு தமிழர்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.
பண்பாடு, நாகரிகம் வரலாற்றை கொண்ட தமிழ் இனத்தை நாகரிகமற்றவர் என்று சொல்ல என்ன தகுதியுள்ளது? ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வியில் மாற்றத்தை திணிக்க நினைக்கும் பாஜக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல் சூலைகள், உணவகங்கள், வயல்வெளிகளில் பணியாற்றும் வடமாநில மக்களுடன் தமிழர்கள் யாரும் பகைமையை பாராட்டவில்லை.
தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று அண்ணா காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. வரும் டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு எழுதும் கடிதங்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே இனி இருக்கும் என்று இறங்கி வந்துள்ளது. மத்திய அரசை இறங்க வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கூட்டத்திற்கான லாபம் நேற்றே கிடைத்துவிட்டது என்று தெரிவித்தார்.
அடுத்த வார்த்தைக்கு முன் மேடைக்கு முன்பிருந்த சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் உரையில் கவனம் செலுத்த முடியாத நாஞ்சில் சம்பத், "இந்த பொம்பளைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுங்க.. முறுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து அமைதியாக்குங்க.. இதனால்தான் கூப்பிடக் கூடாதுனு சொன்னேன்" என்று அருகில் இருந்தவர்களிடம் கோபத்தை வெளிக்காட்டினார். இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications