ஓடிப்போன வேட்பாளர்.. மரகதம் குமரவேல், சத்தியபாமா நல்லவர்களா? எடப்பாடி பழனிசாமி தாக்கு!
திருப்பூர்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக சார்பாக போட்டியிடும் இருவருமே ஓடிப்போன வேட்பாளர் தான் என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். ஓடிப்போன வேட்பாளரை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் விஜய் பாராட்டுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இதற்கு தவெக வெட்கப்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற 10 நாட்களில், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனால் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்கும் அந்தந்த தொகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு அந்த தொகுதியின் அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் சத்தியபாமா இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழலுக்கு தவெக தள்ளப்பட்டிருக்கிறது.
அதேபோல் செங்கோட்டையன் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஜய்க்கு எதிராக காட்டமான விமர்சனங்களை முன் வைத்த எடப்பாடி பழனிசாமி, தவெக வேட்பாளர் சத்தியபாமாவையும் விட்டு வைக்கவில்லை.
அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2 நாட்களுக்கு முன் மதுராந்தகத்தில் விஜய் தவெக வேட்பாளரை அறிமுகம் செய்தார். அந்த வேட்பாளரும், இதே போல் ஓடிப்போன வேட்பாளர் தான். ஓடிப்போன வேட்பாளரை நல்லவர், வல்லவர் என்கிறார். ஓடிப்போனவர் நல்லவர், வல்லவரா? அவரை பக்கத்தில் வைத்து கொண்டு பேசுகிறார். வெட்கமாக இல்லையா?
வேறு கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவரை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் அவருக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்? இதுதான் தூயக் கட்சியா? இது தூயக் கட்சி அல்ல.. தீயக் கட்சி.. உண்மையாக தேர்தலை சந்தித்து வென்றால், பாராட்டலாம். ஆட்சியை காப்பாற்ற வெட்கக்கேடான செயலை செய்தவர் தான் விஜய் என்றும் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications
