டி-20 கிரிக்கெட் போட்டி.. ரசிகர்களுக்காக போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள இந்தியா Vs இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியைக் காண வருவார்கள் என்பதால் சென்னை போக்குரவரத்துக் கழகம் சார்பில் மாநகரப் பேருந்துகளில் இன்று இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக் கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதனை கண்டக்டரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (ஏ.சி. பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications