15 வயது சிறுவனுக்கு 'Standing Ovation' கொடுக்க மனமில்லையா? தோல்வி பயத்தில் முகம் மாறிய காவ்யா மாறன்!
மும்பை: 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 12 சிக்சர்களுடன் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த போது, ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்களும், போட்டி முடிந்த பின் அவர் நடந்துகொண்ட விதமும் தற்போது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

ஐதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக வைபவ் சூர்யவன்ஷி அமைந்தார். 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 97 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றினார். 29 பந்துகளில் சதம் அடித்திருந்தால் வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனையை படைத்திருப்பார். ஆனால் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தது அவருக்கு மட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இந்தப் போட்டியில் காவ்யா மாறன் பக்கம் தொடர்ச்சியாக கேமரா திரும்பி கொண்டே இருந்தது. வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்த போது, விஐபி கேலரியில் அமர்ந்திருந்த காவ்யா மாறன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
வைபவ் 97 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறிய போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவருக்குப் பாராட்டு தெரிவித்தது. ஆனால், காவ்யா மாறன் எழுந்து நிற்காமல் சோகமான முகத்துடன் அமர்ந்தபடியே மிகவும் சாதாரணமாகக் கைதட்டினார். 15 வயது சிறுவனின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இன்னிங்ஸிற்கு காவ்யா மாறன் எழுந்து நின்று மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் சில ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.
ஆனால் போட்டி முடிவடைந்த பின், மைதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது. காவ்யா மாறன் நேரடியாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம் சென்று, அவருக்குக் கை கொடுத்து அவரது அசாத்தியமான இன்னிங்ஸிற்கு மனமார வாழ்த்துகளைத் தெரிவித்தார். தோல்வியின் ஏமாற்றத்தையும் தாண்டி, எதிரணியின் 15 வயது இளம் சாதனையாளரை நேரில் தேடிச் சென்று காவ்யா மாறன் பாராட்டிய விதம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications