கம்பீரின் செல்லப்பிள்ளைக்கு காயமா.. ஹர்சித் ராணா நிலை என்ன? தயார் நிலையில் முகமது சிராஜ்!
மும்பை: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது ஹர்சித் ராணா ஒரேயொரு ஓவர் மட்டும் வீசி களத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் ஹர்சித் ராணா நிலை என்ன என்பது குறித்த விவாதம் தொடங்கி இருக்கிறது.
2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாளை தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி உட்பட 20 அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணி முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே நேற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதில் ஹர்சித் ராணா வெறும் ஒரேயொரு ஓவரை மட்டும் வீசிவிட்டு களத்தில் இருந்து வெளியேறினார். பயிற்சிப் போட்டியில் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீசியதால், ஹர்சித் ராணாவின் ஃபிட்னஸ் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. அவர் காயம் காரணமாக களத்தில் இருக்கவில்லையோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹர்சித் ராணா வெளியேறியதால், சிவம் துபே 4 ஓவர்களையும் வீச வேண்டிய தேவை எழுந்தது. ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்து இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கான மாற்று வீரரையும் இந்திய அணி இதுவரை அறிவிக்கவில்லை.
வாஷிங்டன் சுந்தர் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு எடுக்கலாம் என்று இந்திய அணி நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது. இல்லையென்றால் ரவி பிஷ்னாய்யை எளிதாக மாற்று வீரராக அறிவித்துவிடலாம். இதனால் ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு, முழு விவரம் தெரிந்த பின் மாற்று வீரரை அறிவிக்கலாம் என்று காத்திருக்கின்றனர்.
இப்படியான சூழலில் ஹர்சித் ராணா காயம் அடைந்தால், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவருக்கும் தேவையில்லாத நெருக்கடி உருவாகும். அதேபோல் ஹர்சித் ராணா காயம் காரணமாக விலகினால், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications