வெளுக்க தயாரான ரசிகர்கள்.. கம்பீர் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. இந்த மேட்ச் தோற்றால் ஆப்பு உறுதி!
துபாய்: சாம்பியம்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பில் இருந்து நிச்சயமாக தூக்கப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மாவை விடவும் கம்பீர் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் வாங்கிய அடிதான்.

அதுமட்டுமல்லாமல் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி பெரிய சம்பவங்களை செய்ததில்லை. அதற்கான வாய்ப்பு தற்போது மீண்டும் கிடைத்துள்ளது. டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல் உள்ளிட்ட பலமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் தோல்வியடைந்தால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற்றப்படும். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 38 வயதை எட்டிவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவுக்கு இனியும் வாய்ப்பு வழங்க பிசிசிஐ தயாராகவில்லை.
அதேபோல் ரோஹித் சர்மாவை விடவும் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. ஏனென்றால் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி, ஆஸ்திரேலியா மண்ணில் அடைந்த டெஸ்ட் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாதது என்று கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி தோல்வியை சந்தித்து வந்துள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறினால், நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் தூக்கப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இந்த விவகாரம் குறித்து கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெற்றி கம்பீருக்கும் மிகவும் அவசியமான ஒன்று என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications