"ஸ்ரேயாஸ் ஐயர்" இந்திய அணியின் முக்கியமான லிங்க்.. அதே திட்டத்துடன் வரும் ஆஸ்திரேலியா அணி!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி, 2023 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி திட்டத்துடன் மீண்டும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் மிக முக்கியமான காரணம். ஏனென்றால் நம்பர் 4ல் களமிறங்கி நிதானமாகவும், அதிரடியாகவும் ரன்களை குவிக்கக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டையே குறி வைத்து களமிறங்கி இருந்தார்.

அதற்கேற்ப ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறியதால், இந்திய அணி நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் இம்முறை அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்திய பேட்டிங் வரிசையில் இணைந்துள்ளனர். அக்சர் படேலின் பேட்டிங் வரிசை எது என்பது முடிவு செய்யப்படாமல் இருக்கிறது.
விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டை பறிகொடுத்தால் நம்பர் 5 வரிசையிலும், இல்லையென்றால் 7வது பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட்டு வருகிறார். இருந்தாலும், இந்திய அணியின் ஸ்கோர் 350 ரன்களை எடுக்க வேண்டுமென்றால் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடியுள்ள 3 போட்டிகளிலும் 2 அரைசதங்கள் உட்பட 150 ரன்களை ஸ்ரேயாஸ் ஐயர் விளாசி இருக்கிறார். அதேபோல் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஃபூட் வொர்க் மற்றும் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதற்காக ஸ்டான்சில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அவருக்கு மிகப்பெரிய சாதகமாக மாறியுள்ளது. உலகக்கோப்பையில் தவறவிட்ட வாய்ப்பு, அவருக்கு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்துள்ளது.
இதனால் இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் சரியாக பயன்படுத்தி இந்திய அணியை வெற்றிபெற வைத்தால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே மாறிவிடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களில் பலரையும் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக எதிர்கொண்டதில்லை. இதனால் அவர்களின் பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாந்து விக்கெட்டை கொடுத்துவிடக் கூடாது என்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications