சீனியர் அணிக்கே கிடைக்காத பெருமை.. இந்தியாவை வீழ்த்திய.. பாகிஸ்தான் U-19 அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு
மும்பை: ஆசியக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் U-19 அணிக்கு இஸ்லாமாபாத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியாவை பாகிஸ்தான் அண்டர் 19 அணி வீழ்த்திய நிலையில் இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.
துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்துக் கோப்பையைக் கைப்பற்றிய இளம் அணிக்கு, பொதுவாக இளையோர் அணிகளுக்குக் கிடைக்காத பெரிய கொண்டாட்டங்கள் அரங்கேறின. இந்தியாவை பாகிஸ்தானின் சீனியர் அணி பெரிதாக இறுதிப்போட்டிகளில், ஐசிசி போட்டிகளில் வீழ்த்தியதே இல்லை. அது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு.

இப்படிப்பட்ட நிலையில்தான் சரி அண்டர் 19 வெற்றியையாவது கொண்டாடலாம் என்று இந்தியாவை பாகிஸ்தான் அண்டர் 19 அணி வீழ்த்திய நிலையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு
இஸ்லாமாபாத் விமான நிலையம் வந்த வீரர்களை ஆரவாரக் கோஷங்கள் உடன் மக்கள் வரவேற்றனர். மின்னும் கேமராக்கள் சூழ.. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். தேசிய சீனியர் அணியினருக்கு நிகராக கிடைத்த இந்த வரவேற்பு தனித்துவமானது. வீரர்கள் ரசிகர்கள் மத்தியில் சூழப்பட, கொண்டாட்டத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.
கொண்டாட்டங்கள் அங்கேயே நிற்கவில்லை. இஸ்லாமாபாத் தெருக்களில் மாபெரும் வெற்றிப் பேரணி நடந்தது. வீரர்களை சூழ்ந்தபடி.. மக்கள் வெள்ளம் சூழ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஷெனாய் இசை, மேளச் சத்தத்தால் நகரமே ஒளிமயமாகியது. இது பாகிஸ்தானின் இரண்டாவது U-19 ஆசியக் கோப்பை பட்டத்திற்கான கொண்டாட்டம். இதை அந்நாட்டு பிரதமரும் கொண்டாட உள்ளார். பிரதமர் ஷேபாஸ் ஷெரிப், U-19 அணிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கவுள்ளார்.
இந்தியாவை வீழ்த்திய மகிழ்ச்சி
இளையோர் வெற்றிகள் பொதுவாக அமைதியாகக் கடக்கும் பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றி விதிவிலக்கு. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, இதை பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஒரு பெரும் தருணம் என்று புகழ்ந்து, அணியின் கூட்டு முயற்சிக்கு வாழ்த்தினார். 172 ரன்கள் குவித்த சமீர் மின்ஹாஸ், நான்கு விக்கெட்டுகள் எடுத்த அலி ரெஸா எதிர்கால நம்பிக்கைக்குரிய திறமைகளாகப் போற்றப்படுகின்றனர்.
ஒவ்வொரு வீரருக்கும் PKR ஐந்து மில்லியன் ரொக்கப் பரிசை வழங்குவதாக நக்வி அறிவித்தார். இளையோர் கிரிக்கெட்டில் இது முன்னோடியில்லாத செயல். தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்குப் புத்துணர்ச்சியூட்டும் நம்பிக்கை, ரசிகர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி அளித்துள்ளது.
பாகிஸ்தான் வெற்றி
2025 ஆசிய கோப்பை அண்டர்-19 இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியைச் சந்தித்தது. துபாயில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தது இந்தியா.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், சமீர் மின்ஹாஸ் பெரிய அளவில் ரன் குவித்தார். இந்திய வீரர்களை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்ட அவர், 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 172 ரன்கள் குவித்து தனி ஆளாக மிரட்டினார். அவருக்குத் துணையாக அகமது ஹுசைன் 56 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இந்தியத் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 83 ரன்களை வாரி வழங்கினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்றது மட்டுமே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. மற்றபடி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அணியே முழு ஆதிக்கம் செலுத்தியது.












Click it and Unblock the Notifications