சாம்பியன்ஸ் டிராபி.. வம்பிழுக்கும் ஆஸ்திரேலிய வீரர்! இந்தியாவுக்கு சாதகமாம்! கம்மின்ஸ் கொந்தளிப்பு
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் நிலையில், அதில் இந்திய அணி மட்டும் துபாயில் தனது போட்டிகளை விளையாடுகிறது. இதற்கிடையே இந்திய அணி மட்டும் ஒரே இடத்தில் விளையாடுவது இந்திய அணிக்குச் சாதகமாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடச் சம்மதிக்கவில்லை.

இந்திய அணி
இது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல சம்மதிக்காத நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெற்றால், அந்த போட்டிகளும் துபாயிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு லீக் போட்டிகளை இந்தியா துபாயிலேயே விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்த போட்டியிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இப்படி பேக் டூ பேக் வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு சாதகம்
இருப்பினும், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் இந்த முடிவு இந்தியாவுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகக் கருதுகிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டபடி நடப்பது நல்லது தான். ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் மட்டும் விளையாடுவது அவர்களுக்கு (இந்தியாவிற்கு) ஒரு பெரிய அட்வான்டேஜ்ஜை அளிக்கிறது. இந்திய அணி ஏற்கனவே வலிமையான அணியாக இருக்கிறது. ஒரே இடத்தில் விளையாடுவது கூடுதல் பலத்தை அவர்களுக்குத் தருகிறது" என்றார்.
பாட் கம்மின்ஸ் தான் கடந்த சில காலமாகவே ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக இருந்துள்ளது. கடந்த 2023ல் நடந்த உலக கோப்பையில் கூட பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. இருப்பினும், இப்போது அவர் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சாம்யியன்ஸ் டிராபி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடர்
ஆஸ்திரேலியாவில் ஓய்வில் இருப்பது குறித்தும் ஐபிஎல் தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "வீட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது.. கணுக்கால் காயத்திற்குச் சிகிச்சை பெற்று வருகிறேன். இப்போது தான் மெல்ல ஓடி வந்து பவுலிங் போட ஆரம்பித்துள்ளேன். ஐபிஎல் தொடருக்கு முன்பு சரி ஆகிவிடுவேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணமும் இருக்கிறது. நான் அதற்கு ஆர்வமாகவே இருக்கிறேன்" என்றார்.
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ் காயமடைந்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் இப்போது ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை கடந்த பிப்ரவரி 22ம் தேதி சந்தித்தது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை இன்று சந்திப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications