ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா or இலங்கை? மழை குறுக்கிட்டால் என்னவாகும்.. வெற்றி யாருக்கு?
டெல்லி: இன்று நடக்கும் இந்தியா - இலங்கை இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி மழையினால் போட்டி தடைபட்டால் கோப்பை யாருக்கு வழங்கப்படும், வெற்றி எப்படி தீர்மானிக்கப்படும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆனால் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது.

ஆசிய கோப்பை போட்டியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே மழைதான் விளையாடி வருகிறது என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் மழை குறுக்கிட்டு ரசிகர்களை வேதனைப்படுத்தி விடுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி கூட மழையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் டேவில் தான் போட்டியின் முடிவு தெரிந்தது.
இந்த நிலையில் தான், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை வலுவான அணியாக உள்ளது. லீக் சுற்றில் நேபாளம், பாகிஸ்தான் அணியை பந்தாடியது. வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்திய அணி தனது முழு பலத்துடன் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. இது ஒருபக்கம் இருக்க இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது. இன்று மழை குறுக்கிட்டு போட்டியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டால் நாளை இன்று நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து போட்டி தொடரும்.
ஒருவேளை ரிசர்வ் டேவிலும் வருண பகவான் விளையாடிவிட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இறுதிப்போட்டியில் முடிவு தெரிய குறைந்தது இரண்டு அணிகளும் 20 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த கணக்கு எல்லாம் வேண்டாம்... இன்று மட்டும் மழை பெய்யாமல் போட்டி நடத்த வழிவிட்டால் போதும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
ஆசிய கோப்பையை இந்தியா 7 முறை வென்றுள்ளது. அதாவது, 1984 , 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் கடந்த 5 ஆண்டுகளாக ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனவே, இந்திய அணி இந்த முறை ஆசிய கோப்பையை கைப்பற்றும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பை ரோகித் தலைமையிலான அணி பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications