உடை மாற்றும் அறைக்குள் போயும் உடைந்து அழுத இந்திய வீரர்கள்.. ராகுல் டிராவிட் வேதனை
அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி வீரர்கள் ஆடை மாற்றும் அறையில் உடைந்து அழுததாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய உலகக்கோப்பை தொடர் நேற்று இறுதிப்போட்டியுடன் முடிந்து உள்ளது. பெரும் பலத்துடன் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஆஸ்திரேலியா தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலியா 43வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் 6 வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்று சாதித்து உள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் என நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையடைந்து உள்ளனர். போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற உடனே மைதானத்திலேயே வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ், அடக்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். விராட் கோலி தொடங்கி அனைத்து இந்திய வீரர்களும் சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். கேப்டன் ரோகித் ஷர்மாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்துக்கொண்டு இருந்தது.
இந்த தோல்வியால் இந்திய வீரர்கள் கடுமையான மன வேதனை அடைந்து இருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "டிரஸ்ஸிங் ரூமில் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா உட்பட அனைத்து வீரர்களும் அதிருப்தியில் உள்ளனர். ஆடை மாற்றும் அறை உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. ஒரு பயிற்சியாளராக இதை பார்க்க எனக்கு கடினமாக இருந்தது. ஏனென்றால் இந்த வீரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் கடந்த ஒரு மாதமாக பல தியாகங்களை செய்துள்ளனர். தரமான கிரிக்கெட்டை அவர்கள் விளையாடி உள்ளார்கள்.
இது விளையாட்டுதான். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம். இந்தியா வெற்றிபெற்று இருந்தால் நன்றாக இருக்கும். நாளையும் சூரியன் உதயமாகும். இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இதிலிருந்து நாங்கள் கடந்து செல்வோம். இதைதான் ஒரு விளையாட்டு வீரன் செய்வான். விளையாட்டில் உயரமான இடங்கள் இருக்கு, தாழ்வான இடங்களும் இருக்கும். உயர்ந்த இடத்தை அடையாவிட்டாலும் தாழ்வான இடத்தையும் அடைந்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரே இடத்தில் தேங்கிவிடக் கூடாது. ஒரு கோட்டுக்குள் நாம் அடைபட்டுவிடக் கூடாது. நீங்கள் எதையும் செய்யாவிட்டால் கற்றுக்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications