IPL 2025: ஆர்சிபி அணிக்கு நேரம் சரியில்லை.. கடைசி நேரத்தில் கல்தா கொடுக்கும் ஆஸ்திரேலியா வீரர்கள்!
பெங்களூர்: ஐபிஎல் தொடர் மீண்டும் மே 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், பிளே ஆஃப் போட்டிகள் மட்டும் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் ஆர்சிபி அணி பெங்களூர் மைதானத்தில் அதிக போட்டிகளை விளையாடவுள்ளதோடு, ஆஸ்திரேலியா வீரர்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியோடு நிறுத்தப்பட்டது. தற்போது சூழல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருப்பதால், ஐபிஎல் தொடரை உடனடியாக தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி மே 16ஆம் தேதி ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

அதற்கேற்ப 2 நாட்களுக்குள் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைக்க பிசிசிஐ தரப்பில் அணி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மாலை புதிய அட்டவணையை அணி நிர்வாகங்களுக்கு வழங்க உள்ளது. இம்முறை அதிகமாக வீரர்களை பயணிக்கவிடாமல் சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் லீக் போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியையும் மே 30ல் நடத்த முடிவு எடுத்துள்ளது. ஆனாலும் அணி நிர்வாகங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதுதான். ஏனென்றால் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி அல்லாமல் கூடுதலாக 5 நாட்கள் நடக்கவுள்ளது. இன்னொரு பக்கம் ஜூன் 11ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது.
இதனால் மே 25ஆம் தேதியுடன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் புறப்பட்டு விடுவார்கள். இதனால் அவர்களால் பிளே ஆஃப் சுற்றில் விளையாட முடியாத நிலை உருவாகும். இதனால் அதிக பாதிப்பை சந்திக்கப் போவது ஆர்சிபி அணிதான். ஏனென்றால் ஆர்சிபி அணியின் பவுலிங் முழுக்க முழுக்க ஹேசல்வுட்டை நம்பியே அமைக்கப்பட்டுள்ளது.
ஹேசல்வுட் இல்லாத போட்டிகளில் ஆர்சிபி அணி மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது. ஆனால் பிளே ஆஃப் சுற்றில் விளையாட ஹேசல்வுட் இருப்பாரா என்பது சந்தேகம்தான். அதேபோல் ரபாடா, மார்க்ரம், மிட்சல் மார்ஷ், ஸ்டப்ஸ், லுங்கி இங்கிடி, ஜோஷ் இங்லிஸ், கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களும் புறப்பட்டுவிடுவார்கள். இதனால் இந்திய வீரர்களை நம்பியே பல்வேறு அணிகளும் களமிறங்க வேண்டும்.
இதனால் ஆர்சிபி அணி அதிக பாதிப்புகளை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இங்கிடியும் இருக்க மாட்டார் என்பதால், ஆர்சிபி அணி உள்ளூர் வீரரை மட்டுமே வைத்து விளையாட வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஆர்சிபி அணிக்கு நேரம் சரியில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications