2 வீரர்கள் காயம்.. 4 வீரர்கள் வரப்போவதில்லை.. ஆர்சிபி அணிக்கு வரிசைக் கட்டி நிற்கும் சிக்கல்கள்!
பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களில் யார் யார் மீண்டும் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களில் பலரும் மீண்டும் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்பதும், ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் காயம் அடைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடர் கடைசி கட்ட லீக் சுற்று மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் 6 அணிகள் இருக்கும் நிலையில், அந்த அணிகளின் மீதே அதிக கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

மீண்டும் ஐபிஎல்
இன்னும் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 2ல் வென்றால் கூட ஆர்சிபி அணியால் குவாலிஃபையர் முதல் போட்டிக்கு எளிதாக தகுதிபெற முடியும். ஆனால் ஐபிஎல் தொடர் சில நாட்களுக்கு நிறுத்த வைக்கப்பட்டதால், அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மே 17ல் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்
ஆனால் மே 29ஆம் தேதி முதலே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இன்னொரு பக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை நடக்கவுள்ளது. இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்கள்
ஆர்சிபி அணியை பொறுத்தவரை மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள் டிம் டேவிட், ஹேசல்வுட், ரொமாரியோ ஷெப்பர்ட், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லுங்கி இங்கிடி மற்றும் நுவான் துஷாரா ஆகிய வீரர்கள் தான். இதில் பில் சால்ட் காயம் காரணமாக மீண்டும் இந்தியா வர வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்படுகிறது.
ஹேசல்வுட் அவுட்
இன்னொரு பக்கம் ஹேசல்வுட் தோளில் காயம் ஏற்பட்டிருப்பதால், ஆஸ்திரேலியா நிர்வாகம் அவரை இந்தியா அனுப்ப அனுமதி அளிக்கவில்லை. ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகிய இருவருமே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்களும் மீண்டும் இந்தியா வர வாய்ப்பில்லை.
WTC ஃபைனல்
லுங்கி இங்கிடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் தேர்வாகி இருக்கிறார். இந்த பிரச்சனைகள் போதாதென்று ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதரின் விரல்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்த 2 போட்டிகளில் ரஜத் பட்டிதர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
கேப்டனுக்கும் காயம்
இதனால் விராட் கோலி கேப்டன்சியை ஏற்பாரா அல்லது ஜித்தேஷ் சர்மா வசம் கேப்டன்சியை கொடுப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆர்சிபி அணியின் வெற்றியை பொறுத்தவரை முழுக்க முழுக்க இந்திய வீரர்கள் கைகளிலேயே உள்ளது. ஹேசல்வுட் இல்லாமல், அந்த அணியின் பவுலிங் அட்டாக் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வீரர்கள் இருக்கிறார்களா?
பிசிசிஐ கடைசி நேரத்தில் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளித்திருந்தாலும், எங்கிருந்து ஆர்சிபி அணி நிர்வாகம் வீரர்களை வாங்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமே வீரர்களை விளையாட வாய்ப்புள்ளதால், ஆர்சிபி அணி பிளே ஆஃப் கனவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications