RCB-க்கு ஆப்பு.. பெங்களூரில் இனி ஐபிஎல் போட்டி கிடையாது? புனேவுக்கு மாற்ற முடிவு
பெங்களூர்: அடுத்த ஆண்டு ஐபிஎல் 2026 போட்டியில் ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடாது என்றும், அதற்கு பதில் புனே மைதானத்தை ‛ஹோம் கிரவுண்ட்'டாக்கி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகளில் நடந்து வருகிறது. இந்த ஐபிஎல்லில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) சாம்பிபயன் பட்டத்தை வென்றது. 17 ஆண்டுகள் காத்திருந்து சாம்பியன் கோப்பையை ஆர்சிபி உச்சி முகர்ந்துள்ளது.

இது அந்த அணியையும், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால் நடப்பு சாம்பியனாக வலம் வரும் ஆர்சிபி அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
அதாவது பெங்களூரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் வரை பலியாகினர். அதன்பிறகு தற்போது ஆர்சிபி அணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த அணியை யார் வாங்க உள்ளனர்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியான சூழலில் தான் ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான போட்டியின்போது ஆர்சிபி அணி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் தான் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இருக்காது என கூறப்படுகிறது.
அதாவது பெங்களூருவுக்கு பதில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தை ஆர்சிபி அணி தனது ‛ஹோம் கிரவுண்ட்'டாக மாற்றி விளையாடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலியானது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக வரும் ஐபிஎல் சீசனில் புனே மைதானத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கம்லேஷ் பாய் கூறுகையில், ‛‛ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகளை புனே மைாதானத்தில் நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கர்நாடகாவில் பெங்களூர் மைதானத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இறப்பு பிரச்சனையாக உள்ளது. இதனால் அவர்கள் வேறு மைதானம் தேடுகின்றனர். நாங்கள் எங்களின் மைதானத்தை கொடுக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. டெக்னிக்கல் ரீதியாக சில விஷயங்கள் உள்ளன. அதற்கு தீர்வு காண வேண்டும். இவை அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி புனே மைதானத்தில் விளையாடும்'' என்றார்.












Click it and Unblock the Notifications