சும்மாவே இருக்க முடியாதா.. ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்.. பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?
மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் பிடித்த சம்பவம் சர்ச்சையாகி இருக்கிறது. 16வது ஓவரின் போது ஓய்வறையில் இருந்த ரியான் பராக், சக வீரர்களான துருவ் ஜுரெல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருடன் பேசிக் கொண்டே இ-சிகரெட் பிடிக்கும் காட்சிகள் லைவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, டிரெஸ்ஸிங் ரூமில் அவர் 'வேப்பிங்' (Vaping) செய்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது, 16ஆவது ஓவரில் கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பின.
அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசிக் கொண்டிருந்தவாறே, சாவகாசமாக 'வேப்' (E-cigarette) பயன்படுத்தும் காட்சிகள் லைவில் பதிவாகின. இந்த வீடியோ வெளியான உடனேயே, இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி டிரெஸ்ஸிங் ரூமில் புகைப்பிடிப்பதோ அல்லது இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதோ முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 'மின்னணு சிகரெட்' (E-cigarettes) பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019' (Prohibition of Electronic Cigarettes Act - PECA 2019) படி சட்டவிரோதமானது. இதன் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரியான் பராக் செய்த இந்த செயல், விளையாட்டு விதிகளையும் தாண்டி சட்ட ரீதியிலான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதே சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், டக்-அவுட்டில் மொபைல் போனைப் பயன்படுத்தியதற்காக பிசிசிஐ அவருக்கு அபராதம் விதித்திருந்தது. அந்தப் பின்னணியில், ரியான் பராக் மீதான இந்த விவகாரம் பிசிசிஐ-யை எவ்வாறு அணுகப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications