மும்பை அணியை அப்படியே நகலெடுத்த ஆர்சிபி.. இனி எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.. காரணமே அதுதான்!
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் 24வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது. இந்த சீசனில் வலிமை வாய்ந்த அணியாக கருதப்படும் ஆர்சிபி அணி தொடர்ந்து அசரடிக்கும் வெற்றியை பெற்று வருகிறது. அந்த அணியின் தொடர் வெற்றிக்கும், ஆர்சிபி அணியின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவுள்ள 24வது லீக் போட்டியில் ஆர்சிபி - டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. வழக்கமாக ஆர்சிபி அணி வெற்றிகளை பெற்றாலும், அந்த அணியை பார்த்து அச்சம் கொள்ளும் வகையில் இருக்காது.

2019 மும்பை அணி
ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் ஆட்டம் பல்வேறு அணிகளின் ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆர்சிபி அணி கட்டமைக்கப்பட்டுள்ள விதமே காரணமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியை போல் ஆர்சிபி அணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
யாருக்கு பதில் யார்?
தொடக்க வீரராக டீ காக்-க்கு பதிலாக பில் சால்ட், ரோஹித் சர்மா இடத்தில் விராட் கோலி, பொல்லார்ட் இடத்தில் டிம் டேவிட், பும்ரா இடத்தில் ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா இடத்தில் லிவிங்ஸ்டன் என்று ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ராகுல் சஹருக்கு பதிலாக சுயாஷ் சர்மா, க்ருணால் பாண்டியா இடத்தில் க்ருணால் பாண்டியாவையே வைத்து நிரப்பி இருக்கிறார்கள்.
விராட் கோலியின் மாற்றம்
அதேபோல் ரஜத் பட்டிதார் என்ற சிறந்த கேப்டனையும் நியமித்திருக்கிறார்கள். வழக்கமாக ஆர்சிபி அணியின் மோசமான மிடில் ஆர்டர் காரணமாக விராட் கோலி கொஞ்சம் நிதானமாகவே விளையாடுவார். இது சில நேரங்களில் ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக மாறும். ஆனால் இம்முறை வலிமையான மிடில் ஆர்டர் இருப்பதால், விராட் கோலியின் ஆட்டம் உச்சத்தில் இருக்கிறது.
ஆர்சிபி பேட்டிங்
அதிலும் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து வந்தவர் விராட் கோலி. ஆனால் இம்முறை விராட் கோலி ஸ்பின்னர்கள் வந்தாலே ஸ்வீப் மற்றும் புல் ஷாட் விளையாடி அட்டாக் செய்கிறார். இதனால் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் மிகவும் வலிமையாக அமைந்திருக்கிறது. எந்த மைதானத்திலும் அசால்ட்டாக 200 ரன்களை விளாசக் கூடிய அளவிற்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் அமைந்துள்ளது.
ஆர்சிபி பவுலிங்
அதேபோல் ஹேசல்வுட், ஸ்விங் செய்யக் கூடிய புவனேஷ்வர் குமார், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள், ஸ்பின்னரான க்ருணால் பாண்டியா, லெக் ஸ்பின்னராக சுயாஷ் சர்மா என்று 5 பவுலர்களையும் வித்தியாசமானவர்களாக வைத்திருக்கிறது. அதேபோல் லிவிங்ஸ்டனின் பவுலிங் கூடுதல் சாதகமாக அமைந்திருக்கிறது.
சின்னச்சாமி மைதானம்
இதனால் ஆர்சிபி அணியை இந்த சீசனில் வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. அந்த அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால், சின்னச்சாமி மைதானம் மட்டும்தான். அங்கு விளையாடவுள்ள 7 போட்டிகளில் 4ல் வென்றால் கூட எளிதாக ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications