ஆர்சிபி கோப்பை வெல்ல காரணமான தமிழன்.. மொத்த பாராட்டும் தினேஷ் கார்த்திக்கிற்கு சேர வேண்டும்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரை முதல்முறையாக வென்று ஆர்சிபி அணி புதிய சாதனை படைத்துள்ளது. 18 ஆண்டுகளாக ஆர்சிபி அணி காத்திருந்த நிலையில், இந்த சீசனில் வென்றதற்கு முக்கிய காரணமாக தினேஷ் கார்த்திக் அமைந்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை பாராட்டியும், கொண்டாடியும் வருகின்றனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றி காரணமாக விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட அனைவரும் எமோஷனலாக இருந்தனர். இவர்களை விடவும் கூடுதலாக ஆர்சிபி அணியின் ஆலோசகரும், பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் எமோஷனலாக காணப்பட்டார்.
ஏனென்றால் கடந்த சீசனுடன் ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக், உடனடியாக ஆர்சிபி அணியின் ஆலோசகராக கம்பேக் கொடுத்தார். தற்போது விளையாடிய ஆர்சிபி அணியை கட்டமைத்ததே அவர்தான். தொடக்க வீரர் முதல் கடைசி பவுலர் வரை ஒவ்வொரு வீரரையும் தேடி தேடி ஆய்வு செய்து, ஐபிஎல் மெகா ஏலத்தில் திட்டமிட்டு வாங்கினார்.
புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட், க்ருனால் பாண்டியா ஆகிய மூவரையும் நிச்சயம் வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக் தான். அதேபோல் ஒவ்வொரு முறை ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் களத்தில் தவறான முடிவுகளை எடுக்கும் போதெல்லாம், உடனடியாக ஓடி ஓடி தகவலை அனுப்புவார்.
அதேபோல் ஜித்தேஷ் சர்மாவை சரியான நேரத்தில் தயார் செய்து கேப்டன்சியையும் பெற்று கொடுத்தார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக தினேஷ் கார்த்திக் கோப்பையை வெல்ல தவறினார். ஆனால் ஆலோசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் களமிறங்கிய முதல் சீசனிலேயே ஆர்சிபி அணிக்காக கோப்பையை வென்று அசத்தி இருக்கிறார். இதனால் தமிழக ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications