இந்த தங்கத்தையா வெளிய அனுப்புனீங்க.. ஒரே இன்னிங்ஸில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ரிங்கு சிங்!
நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஃபினிஷர் ரிங்கு சிங்கின் ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசி இந்திய அணி தரமான ஸ்கோரை எட்ட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். ஒரே இன்னிங்ஸில் ரிங்கு சிங் தன் திறமையை நிரூபித்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 8 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 84 ரன்களை குவித்தார்.

அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 44 ரன்களை குவித்தார். அதிலும் கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசினார். ரிங்கு சிங் தன்னுடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்துள்ள 35 சதவிகித ரன்கள் கடைசி 2 ஓவர்கள் மூலமாக மட்டுமே வந்துள்ளது.
19 மற்றும் 20 ஆகிய ஓவர்களில் மட்டும் 74 பந்துகளை எதிர்கொண்டுள்ள ரிங்கு சிங், 22 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 213 ரன்களை குவித்திருக்கிறார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ரிங்கு சிங் கடைசி பந்தை மட்டுமே எதிர்கொண்டு விளையாடி இருந்தார். அதுவும் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால்.
அதன்பின் இந்திய அணியில் இருந்து ரிங்கு சிங் நீக்கப்பட்டார். சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கியதால், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார். இதன்பின் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு ஜித்தேஷ் சர்மா வந்தார். இறுதியாக டி20 உலகக்கோப்பை அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு, மீண்டும் ரிங்கு சிங் உள்ளே வந்துள்ளார்.
இந்தப் போட்டியின் மூலமாக ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட்டின் தரமான ஃபினிஷர் யார் என்ற கேள்விக்கு பேட்டிங் மூலமாக பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ரிங்கு சிங்கை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்ச்சியாக 16 முதல் 20 ஓவர்களில் பேட்டிங் செய்ய அனுப்பி ஃபார்மில் இருக்க இந்திய அணி நிர்வாகம் தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications