ரோஹித் சர்மா எடையை குறைக்கணும்.. கேப்டனாக இருக்க தகுதியில்லை.. காங்கிரஸ் நிர்வாகி கருத்தால் சர்ச்சை!
மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் ஈர்ப்பில்லாத கேப்டன் ரோஹித் சர்மா என்று கூறிய அவர், சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கி இருக்கிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் பலரையும் வியக்க வைத்தது. ஏனென்றால் ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் 4 ஸ்பின்னர்களை வைத்து நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்திருக்கிறார்.
அதில் 4 ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டை இந்திய அணி கைப்பற்றியது. இடதுகை ஸ்பின்னர்களான அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பவுலிங் செய்ய வைத்தது யாரும் எதிர்பாராத திட்டமாக இருந்தது.
இதனால் ரோஹித் சர்மா இன்னொரு ஐசிசி கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு விளையாட்டு வீரராக ரோஹித் சர்மா அதிக உடல் எடையுடன் இருக்கிறார்.
அவர் இன்னும் உடல் எடையை குறைக்க வேண்டும். அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் தகுதியில்லாத கேப்டன் ரோஹித் சர்மா தான் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் குறித்து ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல்வாதியான ஷாமா முகமது கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் ஷாமா முகமது-க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஷாமா முகமது தனது பதிவை நீக்கினார். இருந்தாலும், தனது கருத்துக்கு அவர் இதுவரை எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் தொடர்ச்சியாக விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications