இதுதான் வைபவ் சூர்யவன்ஷி.. சாம்பியனான இந்திய யு19 அணி.. சச்சின் டெண்டுல்கரின் ஸ்பெஷல் பாராட்டு!
மும்பை: யு19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலில் 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்பெஷல் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 411 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை குவித்தார்.

அதாவது வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் மற்றும் பவுண்டரி மூலமாக மட்டுமே 150 ரன்களை குவித்துவிட்டார். இவரின் அதிரடியால் இந்திய அணி 25 ஓவர்களிலேயே 250 ரன்களை எட்டியது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 177 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்த போதும், இங்கிலாந்து அணியின் ஃபால்கனர் 67 பந்துகளில் 115 ரன்களை குவித்தார்.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி ஒரு தோல்வியை கூட அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அப்படியான அணியை இந்திய அணி வீரர்கள் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் சச்சின் டெண்டுல்கர், இளம் வீரர்களை கொண்ட இந்த அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை நினைத்து பெருமையாக உள்ளது. இந்திய அணியின் மொத்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த தருணத்தை கொண்டாடுங்கள்.
அதேபோல் சூர்யவன்ஷி என்ற பெயரில் ஒருவர் இருக்கும் போது, வரலாற்று சிறப்புமிக்க பிளாக்பஸ்டர் எதிர்பார்க்கப்படும். அந்த வரலாற்றை உருவாக்கிவிட்டார் வைபவ் என்று பாராட்டி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பாராட்டு ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளது. ஏனென்றால் வைபவ் சூர்யவன்ஷியின் வயதில் தான் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கி இருந்தார்.












Click it and Unblock the Notifications