டி20 உலகக்கோப்பை.. 2 வீரர்களின் சுமை.. ஒற்றை ஆளாக தீர்த்த சஞ்சு சாம்சன்.. திருந்துமா பிசிசிஐ?
மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே இருக்கும் நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சரியான நேரத்தில் தன்னுடைய ஃபார்மை தேர்வுக் குழு முன் நிரூபித்து காட்டியுள்ளார். கடந்த 3 தொடர்களாகவே இந்திய அணியின் டாப் ஆர்டரில் மிகப்பெரிய பிரச்சனை இருந்து வந்த சூழலில், அதனை சரி செய்ய சஞ்சு சாம்சன் ஒரு ஒளியாக தோன்றி இருப்பார் என்றே சொல்லலாம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி தயாராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சுப்மன் கில் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்தே பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார்.

அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு பெஞ்ச் செய்யப்பட்டார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய டி20 அணியில் நிரந்தர வீரராக சஞ்சு சாம்சன் மாறினார். வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக 3 சதங்களை விளாசிய அவர், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடி தொடக்கத்தை கொடுத்து வந்தார்.
ஆனால் சஞ்சு சாம்சன் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட சுப்மன் கில், கடந்த 18 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேபோல் கேப்டனான பின் சூர்யகுமார் யாதவ் 24 போட்டிகளாக சோபிக்க தவறி இருக்கிறார். இந்த இரு வீரர்களும் ஃபார்மில் இல்லாமல் டாப் ஆர்டரில் ஆடி வருவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.
அதேபோல் சுப்மன் கில் தேவைக்கேற்ப அதிரடியாக ஆடும் வீரராகவே இருக்கிறார். அபிஷேக் சர்மாவை போல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடும் மனநிலைக்கே வரவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் முதல் 2 ஓவர்களை கடந்துவிட்டால், அவரை தடுத்து நிறுத்துவதே பெரிய விஷயம். இப்படியான சூழலில், சுப்மன் கில் திடீரென காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து பாதியோடு விலகினார்.
இதனால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அமைந்தது. இதனை சஞ்சு சாம்சன் பயன்படுத்திக் கொள்வாரா? ஃபார்மில் இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் சஞ்சு சாம்சன் 2வது ஓவரிலேயே லாங் ஆனில் ஒரு சிக்சரை விளாச, தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் ஸ்ட்ரைட் டிரைவில் அடித்த ஷாட்கள் மிரட்சியை கொடுத்தது என்றே சொல்லலாம்.
பெரிய இன்னிங்ஸை ஆடப் போகிறார் என்று வர்ணனையாளர் பேசத் தொடங்க, திடீரென 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் பெரிய இன்னிங்ஸாக இல்லையென்றாலும், தேர்வுக் குழுவினருக்கு தலைவலியை கொடுக்கும் இன்னிங்ஸ் என்றே சொல்லலாம். ஏனென்றால் சுப்மன் கில் 3 இன்னிங்ஸில் அடித்த ரன்களை விட, சஞ்சு சாம்சன் 1 இன்னிங்ஸில் அடித்த ரன்கள் அதிகம்.
இதன் மூலமாக இந்திய டாப் ஆர்டர் பேட்டிங்கின் பிரச்சனைக்கு சஞ்சு சாம்சன் ஒரு ஒளியாக வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் தேர்வுக் குழு டி20 உலகக்கோப்பைத் தொடரில் மீண்டும் சுப்மன் கில்லை தேர்வு செய்தால், என்ன மாதிரியான விளைவுகளும் ஏற்படலாம். இதனால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications