T20WC 2026: இந்திய அணி இன்று அறிவிப்பு.. சுப்மன் கில்லை தூக்க கம்பீர் போட்ட பிளான்.. நடக்குமா?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து சுப்மன் கில் 12 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்கவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த நிலையில் ஐசிசி தொடர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களின் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடக்க உள்ளது. தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தேர்வுக் குழு நிர்வாகிகள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
இந்த டி20 உலலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் ஆசியக் கோப்பைத் தொடரின் போது இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் கொண்டு வரப்பட்டார். அதற்கு முன்பாக இலங்கையில் நடந்த டி20 தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின் இந்திய அணி விளையாடிய முதல் டி20 தொடர் அதுதான். ஆனால் அந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் இந்திய அணியிலேயே இடம்பெறவில்லை. பேக் அப் வீரராக மட்டுமே அமெரிக்கா சென்ற அவர், பின்னர் லீக் போட்டிகள் முடிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் திடீரென டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக வந்தார்.
ஆனால் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்து சுப்மன் கில் உருப்படியாக ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை. டாப் ஆர்டரில் களமிறங்கும் சுப்மன் கில், 12 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் விளையாடாமல் காயம் என்று விலகி இருக்கிறார்.
இதனால் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு இந்திய அணி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங்கை பிசிசிஐ தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சுப்மன் கில்லின் இடத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவராலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications