எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் சரி.. வாய்ப்புக்கு காத்திருக்கணும்.. சூர்யவன்ஷிக்கு சொன்ன கம்பீர்!
மும்பை: இந்திய அணியை பொறுத்தவரை 15 வயது வீரராக இருந்தாலும், 30 வயது வீரராக இருந்தாலும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அதன்பின் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதனை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் இந்த தொடரின் 3 போட்டிகளிலும் 15 வயதாகும் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணியே விளையாடியது. அபிஷேக் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசினார். அதேபோல் சஞ்சு சாம்சன் 2 அரைசதங்களை விளாசினார்.
இதனால் அடுத்த சில தொடர்களிலும் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் அமர வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க நிச்சயமாக காத்திருக்க வேண்டும் என்பதை வைபவ் சூர்யவன்ஷியிடம் தெளிவுபடுத்திவிட்டோம். அவரிடம் என்ன மாதிரியான திறமை இருக்கிறது, அவராலென்ன செய்ய முடியும் என்பதை நன்றாக அறிந்துள்ளோம்.
ஆனால் நீண்ட காலமாக ஒரு வீரர் சிறப்பாக விளையாடி இருக்கும் போது, அவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படும் போது, அது நிச்சயமாக தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்பாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வீரர்களுக்கு இடையில் போட்டி இருக்கிறது. 15 வயது வீரராக இருந்தாலும், 30 வயது வீரராக இருந்தாலும், அவர் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
