திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி
மும்பை: ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 12 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நியு சண்டிகர் மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி அசுரத்தனமான பேட்டிங்கால் சிக்சர் மழை பொழிவதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சியான தருணம்தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர்கள் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வர்ணனையாளராக மைதானத்தில் இருந்த இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை வைபவ் சூர்யவன்ஷி நேரில் சந்தித்துப் பேசினார். ஐபிஎல் தொடர் முழுக்கவே வைபவ் சூர்யவன்ஷியின் செயல்பாடுகள் மீது ஒரு கண் வைத்திருந்தார்.
சுனில் கவாஸ்கரைக் கண்டவுடன் மிகுந்த மரியாதையுடன் அவரது கால்களைத் தொட்டு வைபவ் சூர்யவன்ஷி ஆசி பெற்றார். 15 வயது சிறுவனின் இந்த அடக்கமான பண்பைக் கண்டு நெகிழ்ந்து போன சுனில் கவாஸ்கர், அவரைத் தூக்கி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடம் ஆசி பெற்றுவிட்டு அடுத்த சில நிமிடங்களில் களம் புகுந்த வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 61 சிக்சர்களுடன் ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து சரித்திரம் படைத்தார்.
அபாரமான திறமை மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட்டின் மூத்த ஜாம்பவான்களுக்கு வைபவ் கொடுக்கும் இந்த மரியாதைதான் அவரை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே வைபவ்வின் பேட்டிங் நுணுக்கங்களை வியந்து 'கிரிக்கெட் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது சுனில் கவாஸ்கரின் காலில் வைபவ் விழுந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications