நொந்துபோன முஸ்தாபிசுர் ரஹ்மான்.. கேகேஆர் அணி விடுவித்த பின் கலக்கத்துடன் சொன்ன வார்த்தை
டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறி வருகிறது. இதனால் ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ரூ.9.20 கோடியில் ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர் இன்று அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்தாபிசுர் ரஹ்மான் நொந்துபோய் பேட்டி அளித்துள்ளார்.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணி வாங்கியது. முஸ்தாபிசுர் ரஹ்மான் ரூ. 9.20 கோடிக்கு ஏலம் போனார். வரும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவர் கேகேஆர் அணியில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். தற்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அங்குள்ள இடைக்கால அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்துத்துவா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் விளையாட கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவை சேர்ந்த கஸ்தவம் பாக்சி கடுமையாக கேகேஆர் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானை விமர்சனம் செய்தார். ஷாருக்கானை துரோகி என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல்உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட அகில இந்திய இந்து மகாசபையின் தலைவராக இருக்கும் மீரா ராதோர், ‛‛வங்கதேசத்தில் நம்முடைய இந்து சகோதரர்கள் உயிருடன் எரித்து கொல்லப்படுகின்றனர். நடிகர் ஷாருக்கான் நாக்கை வெட்டி எடுத்து வருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்'' என்று கூறினார் இது சர்ச்சையானது.
இந்நிலையில் தான் முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ உத்தரவிட்டது. இதுபற்றி பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா கூறுகையில், ‛‛சமீபத்திய நிகழ்வுகளின்படி பிசிசிஐ சார்பில் கேகேஆரில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க கோரப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து கேகேஆர் அணியில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முஸ்தாபிசுர் ரஹ்மானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முஸ்தாபிசுர் ரஹ்மான், ‛‛ஒரு அணியில் இருந்து உங்களை விடுவித்தால் என்ன செய்ய முடியும்?'' என்று நொந்துபோய் கூறியுள்ளார். தற்போது கேகேஆர் அணியில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக புதிய வீரரை தேர்வு செய்து கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது.
கேகேஆர் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் முக்கிய பவுலராக இருந்தார். ‛டெட்' ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறமை கொண்டவர். குறிப்பாக ஸ்லோ பால்களை அதிகம் வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். தற்போது அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications