கேப்டன்சியால் அலறிய ரசிகர்கள்.. சுப்மன் கில் செய்த தவறு.. தோல்விக்கு முக்கிய காரணமே பிரின்ஸ் தான்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 5 சதங்களை விளாசிய போதும், இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் இவ்வளவு சிறப்பாக விளையாடியும், இந்திய அணி அடைந்த தோல்விக்கு சுப்மன் கில் 2 காரணங்களை கூறி இருக்கிறார்.
அதாவது கேட்ச்களை பிடிக்காமல் விட்டது மற்றும் கீழ் வரிசை வீரர்களின் பேட்டிங் பங்களிப்பு இல்லாதது ஆகியவையே காரணமாக கூறுகிறார். ஆனால் சுப்மன் கில் கண்களுக்கு தெரியாத ஏராளமான காரணங்கள் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அதாவது சுப்மன் கில் 2 இன்னிங்ஸிலும் எடுத்த டிஆர்எஸ் முறையீட்டில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

டிஆர்எஸ் பிரச்சனை
ஐபிஎல் போன்ற தொடர்களிலும் சுப்மன் கில் டிஆர்எஸ் முறையீட்டை வீணாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதனை இந்திய அணியின் கேப்டனான போதும் தொடர்ந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி வீரர்களின் லைன் மற்றும் லெந்த் ஆகியவை. அதாவது இங்கிலாந்து வீரர்களை ஒப்பிடும் போது, இந்திய அணி பவுலர்கள் ஃபுல்லர் லெந்தில் அதிகளவில் பவுலிங் செய்யவில்லை.
லெந்தில் நடந்த தவறு
சிராஜ், பும்ராவின் பந்துகளில் தாக்கல் இருந்தாலும், அவர்களும் லெந்தில் தவறு செய்ததாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கேப்டனாக சுப்மன் கில் இதனை சரி செய்திருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே லைன் மற்றும் லெந்தில் கன்சிஸ்டன்சியுடன் வீச வேண்டும்.
பிரசித் கிருஷ்ணா பவுலிங்
ஒரு பந்தை குட் லெந்திலும், இன்னொரு பந்தை யார்க்கராகவும், இன்னொரு பந்தை ஃபுல்லர் லெந்திலும், இன்னொரு பந்தை கொஞ்சம் ஒய்டாகவும் வீசினால், பேட்ஸ்மேன்கள் எளிதாக அட்டாக் செய்வார்கள். இத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதும், பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் கன்சிஸ்டன்சிக்கு தயார் செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷர்துல் தாக்கூர் ஏன்?
அதேபோல் ஷர்துல் தாக்கூரை பிளேயிங் லெவனில் சேர்த்ததே பவுலிங்கிற்காக தான். ஆனால் முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களையும், 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்களையும் மட்டுமே வீசி இருக்கிறார். இத்தனைக்கும் வெளிநாடுகளில் ஷர்துல் தாக்கூருக்கு நன்றாக பவுலிங் செய்ய தெரியும். அவரை போன்ற வீரர்கள் பவுலிங் செய்ய செய்யவே கூடுதல் துல்லியத்துடன் பந்தை வீசுவார்கள்.
சரி செய்வாரா கேப்டன்?
ஒரு கேப்டனாக தனது வீரர்களின் திறமை குறித்து கொஞ்சமும் தெரியாமல் சுப்மன் கில் செயல்பட்டிருக்கிறார். இதனால் வரும் டெஸ்ட் போட்டிகளிலாவது இங்கிலாந்து மண்ணில் தயார் செய்யப்படும் ஃபிளாட் பிட்ச்களில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை பவுலர்களுக்கு கொடுக்க சுப்மன் கில் தயாராக வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications