India vs Pakistan: காற்று வாங்கும் மைதானம்.. விற்காமல் கிடக்கும் பல நூறு இந்தியா vs பாகிஸ்தான் டிக்கெட்கள்! என்ன காரணம்
சென்னை: துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று எதிர்கொள்கின்றன. வழக்கமாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும், டிக்கெட்டே கிடைக்காது.! ஆனால், இன்றைய தினம் நடைபெறும் போட்டிக்கு இன்னுமே கூட பல நூறு டிக்கெட் விற்காமல் இருக்கிறதாம்.
கிரிக்கெட் உலகில் எப்போதுமே சில போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து உள்ளிட்ட போட்டிகளை நாம் சொல்லலாம். அதேபோல இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். இரு அணிகளுமே எப்போது மோதினாலும் மக்கள் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.

இந்தியா பாகிஸ்தான்
பாதுகாப்பு காரணங்களால் பல ஆண்டுகளாகவே இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஏதாவது சர்வதேச தொடர்கள் நடக்கும்போது மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்ளும். இதனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எதிர்பார்ப்பு எகிறும். உலகில் எந்தவொரு இடத்தில் இந்த போட்டிகள் நடந்தாலும் மக்கள் ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.
இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. துபாய் நேரப்படி மாலை 6:30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால், கடந்த காலங்களைப் போல இந்த போட்டி மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கிறது.
விற்காத டிக்கெட்கள்
போட்டி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும் போதிலும், இன்னும் டிக்கெட் விற்கப்படாமல் இருக்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூன்று ஸ்டாண்டுகளிலும் ஒரு விஐபி ஸ்டாண்டிலும் இன்னும் டிக்கெட்டுகள் உள்ளன. போட்டியின் அதிகாரப்பூர்வ தளத்திலும் கூட இன்னுமே டிக்கெட் பாக்கி இருப்பதாகவே உள்ளது.
காரணம் என்ன!
$205 விலைக்கு விற்கப்படும் பிரீமியம் ஸ்டாண்ட், $245 விலைக்கு விற்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு பெவிலியன் ஸ்டாண்ட்டிற்கான பல டிக்கெட்கள் இன்னும் விற்கப்படாமலேயே இருக்கிறது.. அதேபோல $1,645க்கு விற்கப்படும் விஐபி ஸ்டாண்டுகளிலும் பல டிக்கெட்கள் விற்கப்படாமலேயே உள்ளன. அதேநேரம் போட்டியை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு (ECB) ஆகியவை இது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
காரணம் இதுதான்
இருப்பினும், இப்போது ஐக்கிய அமீரகத்தில் நிலவும் அதீத வெப்பமே இதற்குக் காரணம் என ரசிகர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாகச் சிலர் கூறுகையில், "செப்டம்பர் மாதத்தில் துபாயில் பகுதியில் மிகக் கடுமையான வெப்பமும் அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மாலை நேரங்களில் கூட வெளியில் இருப்பது கடினம்.. வீரர்கள் இந்த வெப்பத்தில் விளையாடப் பணம் பெறுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் அதிகப் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி இந்த வெப்பத்தில் அவதிப்பட வேண்டுமா? இதன் காரணமாகவே பலரும் வீட்டில் இருந்து மேட்ச்களை பார்க்க முடிவு செய்துள்ளனர்" என்றார்.
அதேநேரம் இந்தியா பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மோதல் இருக்கும் சூழலில், அதுவும் கூட டிக்கெட் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் டிக்கெட்கள் விற்கப்படாமல் இருப்பது வழக்கமானது என்றாலும், இந்தியா- பாகிஸ்தான் போன்ற ஹைவால்டேஜ் போட்டிக்கான டிக்கெட்டுகள் எப்போதும் விற்றுத் தீர்ந்துவிடும். இன்று அது விற்கப்படாமல் இருப்பதால் தான் அது பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications