இன்று தீபாவளியா? தமிழகம் உள்பட நாடு முழுதும் காதை கிழித்த பட்டாசு! இரவில் நடந்த கொண்டாட்டம்.. ஏன்?
சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று பல இடங்களில் இரவில் மக்கள் திடீரென்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் இன்று தான் தீபாவளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திடீர் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றிய விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் வெவ்வேறு தினங்களில் தீபாவளி கொண்டாடினர். இந்த தீபாவளி கொண்டாட்டம் என்பது நேற்று வரை நடந்தது.

இத்தகைய சூழலில் தான் தீபாவளி இன்னும் முடியவில்லை. இன்றும் கூட தீபாவளி தான் என பலரும் நினைக்கும் வகையில் இரவு 10.30 மணியளவில் நினைக்கும் சம்பவம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தரமான சம்பவம் நடந்தது.
அதாவது தமிழ்நாட்டில் மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் திடீரென்று சிலர் பட்டாசு வெடித்தனர். அதேபோல் தான் இந்தியாவின் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தனர். சிலர் மத்தாப்புகளை கொளுத்தினர். திடீரென நடந்த இந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
இந்த கொண்டாட்டத்துக்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணி தான். 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் விராட் கோலி தனது 50வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும், ரோகித் ஷர்மா 47 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும் விளாசியிருந்தனர். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்து அசத்தியது.
கடந்த 2019 உலககோப்பை போட்டியின்போது இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்து வீழ்த்தியது. இதன்மூலம் 2019ல் இந்திய அணியின் உலககோப்பை கனவு தகர்ந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்பினர். அதன்படியே இந்தியா இன்று நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் முன்னேறியுள்ளது.
இதனால் தான் உற்சாக மிகுதியில் இந்திய ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்தனர். அதேபோல் நாட்டின் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications