காணாமல்போன 16,000 பேரின் கதி என்ன? இலங்கையிடம் கேட்கிறது செஞ்சிலுவை சங்கம்
கொழும்பு: காணாமல்போன 16,000 பேரின் கதி என்ன என்று இலங்கை அரசிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்குமான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த இறுதி யுத்தத்தின் போது 1,50,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் கதி என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பாக ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச செஞ்சிலுவைக் குழு விசாரணை நடத்தி வந்தது. கடந்த 14 மாத காலமாக இந்த விசாரணையை செஞ்சிலுவைச் சங்கம் நடத்தியது.

34 பக்க அறிக்கை
தற்போது விசாரணையின் முடிவுகளை 34 பக்க அறிக்கையாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. உறுதியற்ற நிலையில் வாழ்தல் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன தமிழர்கள்
இதில் இலங்கையில் 16,000 பேர் காணாமல் போயுள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 16,000 பேரின் கதி என்ன என்பது தெரியாமல் இன்னமும் அவர்களது உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களின் நிலைமை
அத்துடன் 395 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3-ல் 1 பங்கினர் காணாமல்போன உறவினர்கள் இறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு 1 பங்கினர் அவர்கள் எங்காவது உயிருடன் இருக்கின்றனர் என்றும் எஞ்சியோர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாத நிலையில் உள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது.

இலங்கை பதிலளிக்க வேண்டும்
இப்படி உறவுகளை இழந்தவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆகையால் காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது? என்பது குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications