பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்தால் என்னையே பிரதமராக்குங்க... மைத்ரியிடம் கெஞ்சும் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை தேர்தல் களத்தின் உச்சகட்டமாக யார் பிரதமராகப் போகிறார்கள் என்ற விவாதம் அனல்பறக்கிறது. பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்தால் தம்மையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் கட்சி வேட்பாளராக களத்தில் குதித்துள்ளார்.
ஆனால் ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான அதிபர் மைத்ரிபால சிறிசேனவோ தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார். ஒருகட்டத்தில் என்னையே பிரதமராக்கிவிடுவார் மைத்ரிபால என்று மகிந்த ராஜபக்சே கூறத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து உங்களைவிட சுதந்திர கட்சியில் பலருக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது; நிச்சயம் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று மகிந்த ராஜபக்சேவுக்கு திட்டவட்டமாக ஒரு கடிதத்தை மைத்ரிபால அனுப்பிவிட்டார்.
இதில் அலறிப் போன மகிந்த ராஜபக்சே தற்போது அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புள்ள தலைவர் அவர்களே,
நீங்கள் அனுப்பிய 2015-08-12 திகதியிட்ட கடிதம் 2015-08-13 திகதி அன்று கிடைத்ததாக அறிவிக்கிறேன்.
அந்த கடிதத்தில் உள்ள வேறு தரப்புகளின் கருத்துக்கள் மூலம் உள்ள அடிப்படை அற்ற விமர்சனங்களை நிராகரித்து மறுக்கிறேன்.
2015 பொதுத் தேர்தலை இலக்கு வைத்து உள்ள கருத்துக்கள்படி பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் 2015-01-09 திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்து முடிவதற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியது மற்றும் சில தினங்களுக்குப் பின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தது உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானத்தின் பேரிலாகும்.
ஆனால் 2015 பெப்ரவரி மாதமாகும் போது கட்சியின் பெரும்பாலானவர்கள் மற்றும் மக்கள், மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருமாறு என்னை தூண்டியதை நான் நினைவுபடுத்துகிறேன்.
நான் 2015 ஜனவரி 9ம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி
மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆலோசகர்
இவ்வாறு மகிந்த ராஜபக்சே தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications