ராணுவ புரட்சிக்கு சதி: ராஜபக்சேவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் சம்மன்!
கொழும்பு: இலங்கையில் ராணுவ புரட்சிக்கான சதியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் மகிந்த அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியானபோது அதனைத் தடுக்க ராணுவத்தைக் குவித்து ராணுவ புரட்சியில் ராஜபக்சே ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்றத்தில், துமிந்த நாகமுவ என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த அதிபர் தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9-ந் தேதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் ராஜபக்சே எனக் கூறியிருந்தார்.
இம்மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீபவன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 31-ந் தேதி நேரில் ஆஜராக ராஜபக்சேவுக்கு இலங்கை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கே.பி.க்கு விதித்த தடை நீடிப்பு
இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையானது வரும் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications