இறுதிப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி நடத்த கூடாது... இலங்கை எச்சரிக்கை!
கொழும்பு: தனி ஈழம் வேண்டி இலங்கையில் நடந்த இறுதிப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்த கூடாது என இலங்கை காவல் துறை எச்சரித்துள்ளது. அதேபோல், இந்த இரண்டு நாட்களுக்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மணி ஒலிப்பதற்கும் இலங்கை ராணுவம் தடை விதித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் வேண்டி நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். பலர் உறவுகளை, இருப்பிடங்களை இழந்து அகதிகளானார்கள்.
இப்போர் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கையின் வடக்கு மாகாண சபையில் நடைபெற இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இலங்கை காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் காவல் துறையினர், புலனாய்வு துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாகாணசபை உறுப்பினர்களை சபை கட்டடத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆயினும், அவர்களது தடையை மீறிய சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் கட்டடத்திற்கு வெளியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்த முயற்சித்தனர்.
இதனை தடுத்து, தீபத்தை கீழே தள்ளி காலால் மிதித்த இலங்கை காவல் துறையினர், உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவு அஞ்சலி நடத்தக் கூடாது என எச்சரித்தனர்.
இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்றும் சிங்கள அரசின் நிலையை வெளிப்படுத்துவதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேபோல், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்றும் நாளையும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் மணி அடிக்க இலங்கை ராணுவம் தடைவித்துள்ளது.
இதற்கு, வடக்கு மாகாண சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடக்கு முறை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் வெற்றி பெற்ற தினத்தை இன்று கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications