இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக யாழ். தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன் பதவியேற்றார்!!
கொழும்பு: இலங்கை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாழ்ப்பாணத் தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்று பதவியேற்றார்.

இலங்கை உச்சநீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்க. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் சிராணிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்சே. பின்னர் சிலோன் வங்கியின் தலைவராக இந்த மொகான் பிரீஸை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக்கினார் மகிந்த.

மொகான் பிரீஸ்தான், ராஜபக்சே 3வது முறையாகவும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உத்தரவிட்டவர். இருப்பினும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்து மைத்ரிபால சிறிசேன புதிய அதிபரானார்.
இதனைத் தொடர்ந்து சிராணி பண்டாரநாயக்க மீதான நடவடிக்கைகளை மைத்ரிபால சிறிசேன ரத்து செய்தார். இதனால் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக சிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து மொகான் பிரீஸ் பதவி விலகாமல் இருந்ததால் இலங்கை நீதித்துறையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிராணி பண்டாரநாயக்க தமது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர் இலங்கை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்று அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கனகசபாபதி ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியின் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 1984-ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய சுப்பையா சர்வானந்தா இந்தப் பதவியில் இருந்த முதல் தமிழர். தற்போது இலங்கை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள 2வது தமிழர் ஸ்ரீபவன் ஆவார்.












Click it and Unblock the Notifications