பாஜக ஆட்சில.. தொழில்நுட்ப பிரச்சனை கூட இந்திக்கு சாதகம்.. இண்டேன் கேஸ் விளக்கம் பற்றி சு வெங்கடேசன்
சென்னை: இண்டேன் கேஸ் முன்பதிவு அலைபேசி சேவையில் தமிழ் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், பாஜக தொழில்நுட்ப தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்பாக உள்ளதாக மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் மதுரை தொகுதி சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிலிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) - 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். நீங்கள் இதனை பொறுமையாக புரிந்துகொண்டு உள்ளதற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், எங்களது IVRS சிஸ்டம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள் தடையின்றி பெறலாம் என்பதையும் உறுதி செய்கிறோம்.
LPG சிலிண்டர் மின்பதிவு வசதியை தமிழ் மொழியிலும் பெறலாம் என்ற தகவலுடன், பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் பல மாநில மொழித்தேர்வுகளுடன் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியன் ஆயிலில் உங்களுக்கு அனைத்து இயலக்கூடிய வழிகளிலும் சேவையளிப்பதில் முனைந்து செயல்படுகிறோம் என்பதுடன் எங்கள் சேவைகள் உங்களுக்கு வசதியாகவும் சௌகரியமாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறோம்.
இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியன் ஆயில் முன்னேறத்திற்கு சக்தியளிக்கிறோம். வாழ்விற்கு புத்துயிரூட்டுகிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை பகிர்ந்து சு.வெங்கடேசன் தற்போது வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இண்டேன் சமையல் எரிவாயு பதிவுக்கான ஐ.வி.ஆர்.எஸ் இணைப்பில் இருந்த மாநில மொழிகள் தொடர்புக்கான தெரிவு நீக்கப்பட்டு இருந்தது. தொடர்பு கொண்டால் இந்தி மொழி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. சாமானிய மக்கள் வீட்டில் சோறு பொங்க இந்தி கற்றுக் கொண்டா வர முடியும்? இது அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைமை பொது மேலாளர் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் "தற்போது இப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். “இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) - 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது, இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வுக் காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத்தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். எப்படியோ இன்னொரு இந்தித் தடங்கல் நீங்கியுள்ளது என்பது மகிழ்ச்சிதான். விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications