Australia attack: எரியிற கொள்ளியில் நீங்க எண்ணையை ஊத்திட்டீங்க.. ஆஸ்திரேலிய பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
கான்பெரா: சிட்னியின் போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசுக்கான ஆஸ்திரேலியாவின் ஆதரவு யூத வெறுப்பைத் தூண்டும் எனத் தெரிவித்தார். இத்தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டார்.
நெதன்யாகு இச்சம்பவத்தை 'குரூரமான கொலை' என்று கண்டித்தார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு எழுதிய கடிதத்தில், ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகள் யூத வெறுப்பை ஊக்குவிப்பதாகத் தான் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கடிதத்தில், 'உங்கள் பாலஸ்தீன அரசுக் கோரிக்கை யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. இது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெகுமதியளிக்கிறது. ஆஸ்திரேலிய யூதர்களுக்கு அச்சுறுத்தும் மனப்பான்மையை வளர்த்து, தெருக்களில் உலவும் யூத வெறுப்பைத் தூண்டுகிறது' என எழுதியதாக நெதன்யாகு தமது உரையில் தெரிவித்தார்.
மறுபுறம், அல்பானீஸ் ஆகஸ்ட் 11 அன்று, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையில் ஆஸ்திரேலியா பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் என அறிவித்திருந்தார்.
பிரான்ஸ், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தம் உரையில், அல்பானீஸ் அரசு ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புப் பரவலைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை எனக் குற்றம் சாட்டிய நெதன்யாகு, 'நீங்கள் நோயைப் பரவ விட்டீர்கள், அதன் விளைவு இன்று நாம் கண்ட பயங்கரத் தாக்குதல்கள்' எனவும் சாடினார்.
இத்தாக்குதலையடுத்து, அல்பானீஸ் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தேசிய பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டினார். தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த அவர், இது ஹனுக்காவின் முதல் நாளில் ஆஸ்திரேலிய யூதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனவும் குறிப்பிட்டார்.
அக்டோபர் 2023 இல் இஸ்ரேலின் காசா போர் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீதான யூத எதிர்ப்புத் தாக்குதல்களில் இதுவே மிகவும் கொடூரமானதாகும்.
ஆஸ்திரேலியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்தன. இஸ்ரேல் எதிர்ப்பு மனநிலை அங்கு பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications