நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவி எரித்து கொலை: போலீஸ் விசாரணை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம், அழகன் விளையைச் சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 50), விவசாயி. இவரது மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு சுனில்குமார் (20) என்ற மகனும், சுகந்தி (18), சுபிதா (15) என்ற மகள்களும் உள்ளனர். சுனில் குமார் டிப்ளமோ படித்து வருகிறார். சுகந்தி பள்ளிக்கு செல்லவில்லை. சுபிதா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கே அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வார்.
இன்று அதிகாலையிலும் வழக்கம் போல டியூசனுக்கு சென்றார். 7 மணிக்கெல்லாம் அவர் வீடு திரும்பி விடுவார். ஆனால் இன்று காலை 7 மணி ஆன பிறகும் சுபிதா வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர் அவரை தேடினர்.
அப்போது சுபிதாவின் வீடு எதிரே உள்ள வாழைத் தோப்பில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டனர். அவர்கள் இதுபற்றி சுபிதாவின் தாயார் திரவியக் கனியிடம் கூறினர்.
அவர், தோட்டத்திற்கு ஓடிச்சென்றார். அங்கு எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை பார்த்தார். பிணத்தின் அருகே கிடந்த வளையல்கள் மற்றும் பொருட்களை பார்த்ததும் அது சுபிதா என தெரிய வந்தது. உடனே திரவியக்கனி அலறியபடி மயங்கி விழுந்தார்.
இதற்கிடையே ஊர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ராஜாக்கமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதை அறிந்து மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், கன்னியாகுமரி டி.எஸ்.பி. செல்வராஜ், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மோப்ப நாய் ஓராவும் வரவழைக்கப்பட்டது. அது சுபிதா பிணமாக கிடந்த தோட்டத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சுபிதா வீட்டுக்குள் ஓடி விட்டு மீண்டும் தோட்டத்திற்கே வந்து படுத்துக் கொண்டது.
இதனால் சுபிதா டியூசனுக்கு சென்றபோது அவரை யாராவது வழி மறித்து தோட்டத்திற்குள் தூக்கிச் சென்று அவரை எரித்து கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து கூறிய உள்ளூர்வாசிகள், கூறும்போது, ‘அழகன் விளை பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு செல்வார்கள். எப்போதும் இந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருக்கும். மேலும் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் டியூசன் படிக்க சைக்கிள்களிலும், மொபட்டுகளிலும் சென்றபடி இருப்பார்கள். பெண்களும் பயமின்றி நடந்து செல்வார்கள்.
இந்த நிலையில் மாணவி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த செயலில் ஈடுபட்ட கொடியவனை கண்டுபிடித்து அவனையும் அதே இடத்தில் எரித்துக் கொல்ல வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது' என்று கூறினர்.
பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications