காரில் போனவர் ஹெல்மெட் போடவில்லை.. பறந்து வந்த ஃபைன்.. எஸ்எம்எஸ் பார்த்து மிரண்ட ஓட்டுநர்
தென்காசி: கேமராவில் பதிவாகும் காட்சிகளை அடிப்படையாக வைத்து வாகனங்களுக்கு இ-செலான் மூலம் அபராதம் விதிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஹெல்மெட் போடாமல் போயிருக்கிறார். ஆனால் வாகன பதிவு எண் தவறாக கண்டறியப்பட்டதால் காரில் போனவருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சுரேஷ் என்பவர் நாகர்கோவிலுக்கு காரில் சென்ற நிலையில், ஹெல்மெட் போடவில்லை என இ-செலான் மூலம் அபராதம் விதித்துள்ளது போக்குவரத்து போலீஸ். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் துறையிடம் நடந்த சம்பவத்தை புகாராக கொடுத்திருக்கிறார்.

பொதுவாக வாகன சோதனையின் போது போலீசார் நேரில் பார்த்து அபராதம் விதிப்பார்கள். சில நேரங்களில் அசுர வேகத்தில் சென்று போலீசாரை ஏமாற்றிவிட்டு சில வாகன ஓட்டிகள் சென்று விடுவார்கள். அப்படி எஸ்கேப் ஆகும் வாகன ஓட்டிகளுக்கு கேமரா அடிப்படையில் அபராதம் விதிப்பார்கள். அப்படி விதிக்கப்படும் அபராதம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் தவறுகள் ஏற்படும். அப்படித்தான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் காருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டது தான்..
யாருக்கு இந்த மாதிரி அபராதம் விதிக்கப்பட்டது.. கடையநல்லூர் அருகே வேலப்ப நாடாரூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவர் சேர்ந்தமரத்தில் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அன்று தனது சொந்த காரில் அவரது மாமா செல்லப்பா என்பவருடன் நாகர்கோவிலுக்கு வேலை காரணமாக சென்றுள்ளார்.
அன்று மாலை 6 மணிக்கு ஹெல்மெட் அணியவில்லை என சுரேசின் செல்போனுக்கு இ-செலான்- லிருந்து அபராதம் குறித்து எஸ்எம்எஸ் வந்துள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை அடிப்படையாக வைத்து எலக்ட்ரானிக் முறையில் தானாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரில் சென்ற சுரேஷ் கண்ணனுக்கு ஹெல்மெட் போடவில்லை எனற அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
தென்காசி காவல் சோதனை சாவடி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக எஸ்எம்எஸ்சில் இருந்துள்ளது. இதனால் அதிர்ந்த சுரேஷ் கண்ணன், உடனடியாகத் தனக்குத் தெரிந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி மைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். அவர்கள் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் பரிசோதித்துள்ளனர். இணையதளத்தில், சுரேஷ் கண்ணனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ் கண்ணன் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து சுரேஷ் கண்ணன் கூறுகையில், "நான்கு சக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்தது எனக்கு வினோதமாக இருக்கிறது" என்றார். இதன் மூலம் தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதுபோன்ற தவறான அபராதங்களை சரிசெய்ய முடியும். சோதனையில் ஈடுபட்ட குறிப்பிட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னால் ஏற்றுக்கொண்டு அபராதத்தை ரத்து செய்து விடுவார்கள். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.












Click it and Unblock the Notifications