கடலில் தத்தளித்ததால் 4 நாட்களாக பட்டினி.. கரை திரும்பிய மீனவர்கள் உருக்கம்!
கடலில் இருந்து மீட்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களில் ஒரு குழுவினர் சின்னத்துறை பகுதிக்கு வந்தனர்.
கன்னியாகுமரி: கடலில் இருந்து மீட்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களில் 11 பேர் கொண்ட ஒரு குழுவினர் சின்னத்துறை பகுதிக்கு வந்தனர்.
கடலில் இருந்தபடியே ஆட்டிப்படைத்த ஓகி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவ கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

சின்னத்துறைக்கு வந்தனர்
இந்நிலையில் மீட்கப்பட்ட மீனவர்களின் 11 பேர் கொண்ட ஒரு பகுதியினர் கரை திரும்பியுள்ளனர். அவர்கள் பேருந்து மூலம் சின்னத்துறை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

தகவல் இல்லை
மீனவர்கள் அழைத்து வரப்பட்டதைக் கண்ட சக மீனவர்கள் உற்சாக முழக்கமிட்டனர். கரைதிரும்பிய மீனவர்கள் புயல் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்ச சாட்டினர்.

உணவுப்பொருட்கள் பறந்துவிட்டது
மேலும் கடலில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக கூறிய அவர்கள் உணவுப்பொருட்கள் எல்லாம் காற்றின் வேகத்தில் பறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

4 நாட்கள் பட்டினி
மேலும் கடலில் தத்தளித்த கடந்த நான்கு நாட்களும் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக கிடந்ததாகவும் மீனவர்கள் உருக்கமாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்களை அழைத்து சென்று நிர்வாகிகள் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.












Click it and Unblock the Notifications