300 ருபாய் லஞ்சம்... மதுரை அரசு மருத்துவமனையில் தாமத சிகிச்சையால் பலியான இளைஞர்
மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர் கேட்ட ரூ.300 லஞ்சம் கொடுக்காததால், சிகிச்சை தாமதிக்கப்பட்டு 18 வயது இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பிரசவம் முதல் பிணவறை வரை லஞ்சம் தலைவிரித் தாடுவதாக புகார் எழுந்துள்ளது. மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வருகிறார் அப்பாவி தந்தை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 9 ஆயிரம் புறநோயாளிகள், 2,600 உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தமிழகத்திலேயே நோயாளிகள் வருகையில் பெரிய மருத்துவமனை என்ற பெருமையும் இதற்கு உள்ளது. இந்த மருத்துவமனை சமீப காலமாக லஞ்சத்துக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்று வருகிறது.
ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர் கேட்ட ரூ.300 லஞ்சம் கொடுக்காததால், சிகிச்சை தாமதிக்கப்பட்டு 18 வயது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார். மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் ராஜேந்திர பிரசாத், 18. கடந்த மே 2ம் தேதியன்று ராஜேந்திர பிரசாத்திற்கு மூச்சு திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணபதி, ராஜேந்திர பிரசாத் காலை 10 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பொது மருத்துவப் பரிவில் முதலில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான அனுமதி சீட்டு 20 நிமிடங்களுக்கு பிறகே வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் ராஜேந்திர பிரசாத்தை ஸ்டெக்சரில் இழுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். கணபதி அதனை தர மறுத்ததால், அந்த ஊழியர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான அனுமதி சீட்டுடன் ஸ்டிரக்சரை இழுக்க மறுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் கணபதியே ஸ்டிரக்சரை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் வலிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ராஜேந்திர பிரசாத்தின் வாயில் ரத்தம் வழிய துவங்கி உள்ளது. இதனை பார்த்தும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர், அனுமதி சீட்டு இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி உள்ளார்.
அப்போது மற்றொரு மருத்துவமனை ஊழியர் கணபதிக்கு உதவி செய்ய முன்வந்து, மாற்று அனுமதி சீட்டு பெற்று தந்துள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்க தாமதமானதால் அதற்குள் ராஜேந்திர பிரசாத் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ராஜேந்திர பிரசாத்தின் உடலை பிணவறையில் வைக்க அனுமதி ரசீது கொடுக்க ரூ.100ம், உடலை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல அங்கிருந்த பெண் ஊழியர் ரூ.200ம் கேட்டுள்ளனர். தன்னிடம் ரூ.80 மட்டுமே இருப்பதாக கணபதி கூறி உள்ளார். ஆனால், இரக்கமின்றி அந்த பணத்தையும் அந்த பெண் ஊழியர் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல அதன் டிரைவர் ரூ.500 கேட்டுள்ளார். ஆனால் கணபதியிடம் பணம் இல்லை. தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மே 24ம் தேதி மதுரை கலெக்டரிடம் கணபதி புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த பயனும் இல்லாததால் தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.
• மதுரையில் 2002ம் ஆண்டு வெடிகுண்டு வீசி தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் காட்டியதாக எழுந்த புகாரால் 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
•2006ம் ஆண்டு பார்வையிழந்த பெற்றோரின் குழந்தை கடத்தல் முதல் இதுவரை 8 குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.
•2009ம் ஆண்டு பிரசவ வார்டில் ஊழியர்களிடம் லஞ்ச பணம் பறிமுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அரங்கேறின.
•லஞ்சம் வாங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை வளாகத்தில் 20 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும், நோயாளிகளிடம் சிகிச்சைக்கு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
•அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால், ரூ.1,000 பெண் குழந்தை என்றால் ரூ.500 ஊழியர்கள் சன்மானமாகப் பெறுவது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. மருத்துவமனை சீருடை அணிந்துகொண்டு ஊழியர்கள் போல நோயாளிகளிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது.
•லஞ்சத்தை ஒழிப்பதில் தொடங்கி, தரமற்ற சிகிச்சை, போக்குவரத்து நெரிசல், திருட்டுச் சம்பவங்களை தடுப்பதில் மருத்துவமனை நிர்வாகம், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு இல்லாத நிலை உள்ளது என்று மதுரையைச் சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
•இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை டீன் எம்ஆர்.வைரமுத்து ராஜு , மருத்துவ மனை சிகிச்சையில், எந்தத் தவறும் நடக்கவில்லை. காண்ட்ராக்ட் பணியில் இருந்த ஒருவர் லஞ்சம் கேட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
•இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். உயிரிழந்த நோயாளி பலமுறை வலிப்பு வந்து உணவுத்துகள்கள் புரையேறி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
• இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளியின் நிலை அறிந்து எவ்வித விதிமுறைகளும் இன்றி சிகிச்சை அளிக்க வேண்டியது ஒரு டாக்டரின் கடமை. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மருத்துவமனை டீனிடம் கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
• 300 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த காரணத்தால் 18 வயது மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம் செய்யப்பட்டு உயிர்பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார் அப்பாவி தந்தை. அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இளைஞரின் மரணத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications