அதிமுக ஆட்சியில் அதிமுகவினருக்கே பாதுகாப்பில்லை: ஸ்டாலின்
காஞ்சிபுரம்: மின்பற்றாக் குறையை 3 மாதத்தில் சரி செய்து விடுவேன் எனச் சொல்லி, வாக்கு கேட்டார் ஜெயலலிதா இப்போது 3 வருடம் முடிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுகவினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் ஜி. செல்வத்தை ஆதரித்து மாபெரும் பொதுகூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

தேர்தலுக்காக மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும், ஆட்சி இருந்தாலும் - இல்லாவிட் டாலும் உங்களுக்காக வருபவர்கள், உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள். வெற்றி பெற்றால் கோட்டை, இல்லை என்றால் கொடநாடு என்பது ஜெயலலிதாவின் பண்பாடு.
தேர்தல் வந்தால் மட்டும் அவருக்கு மக்கள் ஞாபகம் வரும். அப்போது கூட ஹெலிகாப்டரில் தான் வருவார், அவருக்கு பூமியில் காவல்துறையை காவலுக்கு நிற்க வைத்தது மட்டும்தான் ஜெயலலிதாவின் சாதனை. அப்படி வந்து பிரச்சாரம் செய்கையிலே, மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்றபோது எதையும் செய்திடவில்லை என ஒரு பொய்யான, தவறான குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறீர்கள்.
நான் கையில் வைத்திருப்பது திமுக தலைவர் கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை. திமுகவின் அறிக்கை அதுவும் தலைவர் கலைஞரின் அறிக்கை என்றாலே திருக்குறள் போல இரண்டு வரிகள் இடம் பெற்று இருக்கும்.
" சொன்னதை செய்வோம் - செய்வதை சொல்வோம்" என்பவைதான் அந்த வரிகள்.
தி.மு.க. மத்திய அரசில் இருந்ததால் காஞ்சிபுரத்திற்கு கிடைத்த திட்டங்கள்:
260 கோடி ரூபாய் மதிப்பில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் அழகிய அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
1800 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கம்.
470 கோடி மதிப்பில் ஓரகடத்தில் தேசிய வாகன சோதனை மையம்.
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம்.
உத்தண்டியில் கடல் சார் பல்கலைக்கழகம்.
908 கோடி ரூபாயில் நெம்மிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.
இந்த மாவட்டத்தில் நெசவாளிகள் நிரம்ப உண்டு என்பதை எல்லோரும் அறிவார்கள். அதனால்தான் எப்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை தலைவர் கலைஞர் கொண்டு வந்தாரோ, அதேபோல நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரத்தை தந்தது திமுக ஆட்சியில்தான்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின் போது காஞ்சிபுரத்தில் மத்திய அரசு உதவியுடன் 83.83 கோடி ரூபாய் மதிப்பில் "பட்டுப்பூங்கா" அமைக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் அந்தத் திட்டம் முடக்கப்பட்டு விட்டது.
முடக்கப்பட்ட திட்டங்கள்
காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
முடக்கப்பட்ட செய்யூர் அனல் மின் நிலையத்திட்டம்:
20000 கோடி ரூபாயில் 4000 மெகாவாட் தயாரிக்கும் செய்யூர் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஜெயலலிதா இத்திட்டத்தை முடக்கி விட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியல் படுகொலைகள் பல இந்த மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அரசியல் படுகொலைகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பீதியில் உள்ளனர். அ.தி.மு.க. வினருக்கே அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பில்லை.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 221 படுகொலைகள் நடந்ததுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சி செய்த சாதனை.
நான் போலீஸை குறைகூறவில்லை. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா தான் அதை சரியாக கையாள தெரியாதவர். அந்த மாதிரியான கையாளாத ஆட்சிதான் நடைபெற்றுக் கெண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications