1984 எம்ஜிஆரும், 2016 ஜெ வும் …. என்னதான் சொல்லுகிறது வரலாறு?

Subscribe to Oneindia Tamil

- ஆர்.மணி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் முடிவடைந்துவிட்டன.

ஜெ மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டது வியாழக்கிழமை, செப்டம்பர் 22 ம் தேதி இரவு 10.30 மணியளவில். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12.45 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த செய்திக் குறிப்பில் முதலமைச்சர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு சம்மந்தமாக அனுமதிக்கப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அடுத்த நாள் செப்படம்பர் 23 ம் தேதி மதியம் அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த செய்திக் குறிப்பில் முதலமைச்சருக்கு காய்ச்சல் குணமாகி விட்டதாகவும், அவர் வழக்கமான காலை உணவை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதே போன்ற வாசகங்களை கொண்ட நான்கு அல்லது ஐந்து வரிகள் மட்டுமே கொண்ட செய்திக் குறிப்புகள் தொடர்ச்சியாக அப்பல்லோவிடமிருந்து வந்தன. முதலமைச்சர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு போகப் போகிறார் என்ற செய்தி முற்றிலும் தவறானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

1984 MGR and 2016 Jayalalithaa

பின்னர் அக்டோபர் 1 ம் தேதி காலையில் வெளிவந்த 'தி ஹிந்து' மற்றும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ்களில் இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் பீல், ஜெ வுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை யார் இந்த பத்திரிகைகளுக்கு கொடுத்தார்கள் என்ற விவரம் (source of information) இந்த இரண்டு 'பெரிய' பத்திரிகைகளிலும் இல்லை. அன்று மாலையில் ஜெ வை வந்து பார்த்த ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஜெ வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அப்பல்லோவில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை சரியானதாக இருப்பதாகவும் சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வந்த செய்திக் குறிப்புகளில் முக்கியமான செய்திக் குறிப்பு அக்டோபர் 3 ம் தேதி வந்தது.

"ஜெ உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப் படுகிறது," என்று முதன்முறையாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. வெறும் காய்ச்சலுக்காக சிகிச்சை என்ற நிலைமை மாறி, முதன்முறை செயற்கை சுவாசத்தில் முதலமைச்சர் இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அப்பல்லோ அறிவித்தது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1984 MGR and 2016 Jayalalithaa

கடைசியாக இன்று வந்திருக்கும் 'தி ஹிந்து' மற்றும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மூன்று மருத்துவர்கள் ஜெ வுக்கு சிகிச்சை அளிக்க வந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதனிடையே ஜெ வின் உடல்நிலை குறித்த அறிக்கையை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ஜெ குணமாகும் வரையில் தாற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்றும் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 'மலிவான விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. இதுபோன்ற மனுக்களால் நீதிமன்றத்தை அரசியல் களமாக்க வேண்டாம்' என்றும் மனுதாரருக்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலைமையை 1984 அக்டோபர் முதல் வாரத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் சுவாரஸ்யமான தகவல்களாகத்தான் இருக்கின்றன.

அப்பல்லோவில் எம்ஜிஆர் சேர்ந்தவுடன் முதல் பத்து நாட்கள் அவரது மருத்துவ அறிக்கையை மருத்துவமனைதான் விடுத்தது. நிலைமை தீவிரமாகத் துவங்கியவுடனேயே மருத்துவமனையிடம் இருந்து அறிக்கை விடுக்கும் அதிகாரத்தை அரசு எடுத்துக் கொண்டது. ஒவ்வோர் நாள் மாலையும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே எம்ஜிஆர் உடல்நிலை பற்றி அறிக்கை விடுவிப்பார். அந்த அறிக்கையும் ஒரே மாதிரிதான் இருந்தது.

'புரட்சித் தலைவர் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம். புரட்சித் தலைவர் இட்லி சாப்பிட்டார். புரட்சித் தலைவர் முகம் பார்த்து சிரித்தார்' என்று ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டதாக இருக்கும். இந்த அறிக்கைகளைப் பற்றி திமுக தலைவர் மு.கருணாநிதி இப்படிச் சொன்னார்: 'ஹண்டே புளுகு, அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு'.

1984 MGR and 2016 Jayalalithaa

ஆனால் ஒரு கட்டத்தில் ஜப்பானிலிருந்து வந்திருந்த நரம்பியல் நிபுணர் ஒருவரும், அமெரிக்காவிலிருந்து வந்திருந்து சிறுநீரக நிபுணர் ஒருவரும் எம்ஜிஆருக்கு சிறுநீரக் மாற்று அறுவை சிகிச்சை தேவைப் படுகிறது என்பதனை அப்பல்லோ மருத்துவ மனையிலேயே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அதன் பின்னர் அமெரிக்கா சென்ற எம்ஜிஆர் 1985 பிப்ரவரியில்தான் நாடு திரும்பினார். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து கொண்டே தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் தற்போதய நிலைமை முற்றிலுமாக வேறாகவே இருக்கிறது. ஜெ வின் உடல்நிலை பற்றிய அறிக்கையை சீரற்ற இடைவெளியில்தான் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடுகிறது. இங்கிலாந்திலிருந்து வந்த மருத்துவரும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெ வின் சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை உறங்கப் போனால் வதந்திகளும், பொய்ச் செய்திகளும் ஊர் சுற்றக் கிளம்பிவிடும் என்பார்கள். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவ அறிக்கைகளுக்கும் (medical bulletin) செய்தி அறிக்கைகளுக்கும் (Press release) வித்தியாசம் உண்டு. ஜெ விஷயத்தில் அக்டோபர் 3 ம் தேதி அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருக்கிறது என்றும் நோய்த் தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுகிறது என்றும் வந்ததுதான் முதல் மருத்துவ அறிக்கை. மற்றதெல்லாம் செய்திக் குறிப்புகள்தான். இன்றுடன் மருத்துவ அறிக்கை வந்து இரண்டு நாட்களாகின்றன.

எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது பிரதமர் இந்திரா காந்தி வந்து பார்த்தார். ஆந்திர பிரதேச முதலமைச்சர் என்டி ராமாராவும், கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டேவும் வந்து பார்த்தார்கள். ஜெ வை தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்தியாசாகர் ராவ் பத்து நாட்கள் கழித்து வந்து பார்த்தார். பிரதமரும் வரவில்லை, மற்ற மத்திய அமைச்சர்களும் வந்து பார்க்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் ஜெ வைப் பார்க்காமலேயேதான் திரும்பியிருக்கிறார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்து, ஏழு மாதங்கள் ஜெ வனவாசம் இருந்தார். அப்போது ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட வீட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்தாண்டு ஜனவரி 18 ம் தேதி சந்தித்து 40 நிமிடங்கள் உரையாடினார். ஆனால் இப்போது பெயர் சொல்லிக் கொள்ளும்படியிலான ஒரு மூத்த பாஜக அமைச்சரோ, மோடியோ ஜெ வை நலம் விசாரிக்க வரவில்லை.

2015 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி ஜெ வை அவரது வீட்டில் சந்தித்து மதிய உணவு சாப்பிட்டார் பிரதமர் மோடி. ஒரு முதலமைச்சரின் வீடு தேடி பிரதமர் மோடி போனது அது முதன்முறை. ஆனால் இன்று 15 நாட்களாக ஜெ மருத்துவமனையில் இருக்கிறார். மத்திய அரசின் பாராமுகம் தொடருகிறது. மோடி முதலமைச்சராக பதவியேற்ற மூன்று முறையும் - 2002, 2007, 2012 - நேரில் போய் வாழ்த்தியவர்தான் ஜெயலலிதா. ஆனால் தற்பொழுது மோடியின் அலட்சியம் ஆச்சரியமாக உள்ளது.

1984 ல் தற்பொழுதய அளவுக்கு தகவல் தொழில் நுட்ப வசதிகள் இல்லை. ஆனால் தற்பொழுது மிகப் பெரியளவுக்கு தொழில் நுட்ப வசதிகள் பெருகி விட்டன. மனித குல வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்பொழுது தொழில் நுட்ப வளர்ச்சி பெருகியிருக்கிறது. இன்று அநேகமாக எந்த தகவலையும் எவரும் எவரிடமிருந்தும் மறைக்க முடியாது. ஆனால் 1984 ல் எம்ஜிஆரி ன் உடல் நலம் பற்றிய செய்திகள் எப்படி மூடு மந்திரமாக இருந் தோ அப்படியேதான் 32 ஆண்டுகள் கழித்தும் இருக்கின்றன. இது ஆச்சரியமானதுதான். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் இல்லாத ஒன்று தற்போது இருக்கிறது. அது சமூக வலைதளங்கள். அதனால்தான் இந்தளவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இன்று மாநில அரசின் நிர்வாகம் அனேகமாக ஸ்தம்பித்துக் கிடக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம். 1984 ல் அப்படித்தான் இருந்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு மாநில அரசிடம் மென்மையாக நடந்து கொண்டதற்கு காரணம், எம்ஜிஆரு க்குப் பிந்தய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசியல்ரீதியில் காலூன்றத்தான். தற்போதய சூழலில் திடீரென்று ஏதாவதோர் நெருக்கடி தமிழகத்தில் ஏற்பட்டால் அதில் அரசியல் குளிர் காய நினைக்கும் மத்திய பாஜகவின் அணுகுமுறைதான் இன்று மாநிலத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயிருப்பதை கண்டுங் காணாமல் இருப்பது.

ஆளுநர் வித்தியாசகர் ராவ் ஜெ வை அக்டோபர் 1 ம் தேதி வந்து பார்த்து விட்டுப் போகிறார். 3 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லையென்று மோடி அரசு பல்டி அடிக்கிறது. 4 ம் தேதி 50 அஇஅதிமுக எம்பிக்களை நேரில் சந்திக்காமல் தெருவில் நிற்க வைக்கிறார் மோடி. இந்த துணிச்சலுக்குக் காரணம் தமிழகத்தில் இன்று நிலவும் அசாதாரணமான அரசியல் நிலவரம்தான்.

ஆனால் 1984 ல் நடக்காத ஒன்று தற்போது நடந்திருக்கிறது. எம்ஜிஆரை பரிசோதிக்க டெல்லி யிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் யாரும் அப்போது வரவில்லை. ஆனால் தற்போது வந்திருக்கிறார்கள். இது விவரம் அறிந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இன்று டில்லியிலிருந்து வந்திருக்கும் சிறப்பு மருத்துவர்களை விட சிறந்தவர்கள் சென்னையிலேயே இருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் வர வேண்டியதன் அவசியம் என்ன?

"எனக்குக் கிடைத்த தகவல், இவர்கள் மத்திய அரசினால் இங்குள்ள உண்மை நிலவரத்தை அறிய அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். வந்திருப்பவர்களை விட மிகச் சிறந்த மருத்துவர்கள் சென்னையிலேயே இருக்கிறார்கள். இவர்கள் வந்ததன் காரணம் சம்மந்தப்பட்டவரின் உடல் நிலை பற்றிய துல்லியமான தகவலை மத்திய அரசுக்கு தெரிவிக்கத்தான். இது first hand information பெறுவதற்காக நடந்து கொண்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவர்கள் சம்மந்தப்பட்டவரின் அருகில் போவதை அரசியல் சாசனத்துக்கு அப்பாற்ப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களால் தடுக்க முடியாது. அப்படி அவர்கள் செய்தால் அவர்கள் அம்பலப் பட்டு போவார்கள்,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் ஒருவர்.

"இன்று மத்திய அரசின் கவலை ஐசியூ வுக்கு போய்ச் சேர்ந்து விட்ட தமிழக அரசின் நிர்வாகத்தைப் பற்றித்தான். அந்த மற்ற நபரைப் பற்றியல்ல. ஒரு தனி நபர் ஐசியூ வில் இருக்கலாம். அவர் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும். ஆனால் ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் ஐசியூ வுக்குப் போவது சகிக்க முடியாதது. அதுதான் தற்போது தமிழகத்தில் நடந்திருக்கிறது. இந்த நிலைமையை கையாளுவதில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான ஆழமான கணக்குகள் இருக்கலாம். நான் மறுக்கவில்லை," என்று மேலும் கூறுகிறார் அந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.

1984 ல் நெடுஞ்செழியன், ஆர்எம் வீரப்பன் போன்ற விவரம் அறிந்த அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அப்படி யாரும் தற்போது இல்லை. அக்டோபர் 4 ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த, மேலாண்மை வாரியம் பற்றிய அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். இது வழக்கமாக அரசியல் உயர்மட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டிய கடிதம். முதலமைச்சர் எழுத முடியவில்லை என்றால், மூத்த அமைச்சர்கள் எவராவது பிரதமருக்கோ அல்லது நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதிக்கோ எழுதியிருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு முக்கியமான விஷயத்தை அதிகாரிகள் மட்டத்தில் தமிழக அரசு கையாள்வது என்பது தற்போதய அரசியல் சூழ்நிலையில் ஜெ வை த் தவிர வேறு எவருக்கும் அரசியல் மேலாதிக்கம் வருவதை அந்தக் குறிப்பிட்ட அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையம் விரும்பாததன் விளைவு என்றே பார்க்கப்படுகிறது.

இடதுசாரி அரசியல் அறிவுஜீவிகள் அடிக்கடி கார்ல் மார்க்சின் ஒரு புகழ் பெற்ற வாசகத்தை சொல்லுவார்கள். "தத்துவாசிரியர் ஹெகல் சொல்லுகிறார், வரலாற்று சிறப்பு மிக்க ஒவ்வோர் நிகழ்வும் இரண்டு முறை நிகழும். ஆனால் ஹெகல் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார். அது இந்த நிகழ்வு முதன் முறை ஒரு துன்பியல் நாடகமாக இருக்கும், இரண்டாவது முறை இது கேலிக்கூத்தானதாக இருக்கும்".

1984 தமிழகத்தையும், 2016 தமிழகத்தையும் பார்த்தால் கார்ல் மார்க்சின் கணிப்பு மீண்டும் ஒரு முறை உண்மையாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+