தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து... 2 தொழிலாளர்கள் பலி- 2 பேர் படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் குழாய் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் அதில் இருந்த கொதிநீர் பட்டு உடல் வெந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 மின்சார உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 36 ஆண்டுகள் பழமையான எந்திரங்களும் இயங்கி வருகின்றன. இதனால் அவ்வப்போது கொதிகலன் குழாயில் ஓட்டை ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 5.15 மணி அளவில் அனல்மின் நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி எந்திரங்களிலும் முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்தது. 5-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில், நிலக்கரி எரிக்கப்பட்டு குழாய் வழியாக செல்லும் தண்ணீர் சூடாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராதவிதமாக சூடான நீர் சென்று கொண்டிருந்த குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்த நீர் கீழே கொட்டியது. அந்த நீரானது கொதிகலன் குழாயின் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியது.
இதில் தூத்துக்குடி தெர்மல் நகர் முத்து நகரை சேர்ந்த ஆறுமுகம்(வயது 40), முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகபெருமாள்(22) ஆகியோர் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கேம்ப்-1 பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்னேஷ்(27), அனல்மின் நிலைய தொழில்நுட்ப உதவியாளர் மதுரை சமயநல்லூர் பாத்திமா நகரை சேர்ந்த நூர்பிச்சை மகன் செய்யது உமர் இஸ்தாக்(27) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மற்ற தொழிலாளர்கள் அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் தங்கராஜ் தலைமையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் பலியான தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications