தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு அச்சுறுத்தல்.. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மடத்திற்கு அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இந்த நிலையில் மடாதிபதியின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயசந்திரன், செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த. விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ்33), செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீன மடத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு பேர் மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
