மீண்டும் பதற்றம்.. 2 மாணவர்கள் கொடூர கொலை.. மணிப்பூர் விரையும் சிபிஐ இயக்குனர் - பீரன் சிங் தகவல்
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் மாயமான 2 மாணவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சிபிஐ இயக்குனர் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளார் என அம்மாநில முதல்வர் பீரன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக மணிப்பூர் உள்ளது. இங்கு அதிகளவில் பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மைத்தேயி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மே மாதம் 3ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் என்பது வன்முறையாக உருவாகி தொடர்ந்து நீடித்து வருகிறது. குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் இருதரப்பினரும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்துவதால் மக்கள் இறக்கின்றனர். அங்கு மணிப்பூர் போலீசார், மத்திய படை போலீசார், ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் கூட வன்முறை மட்டும் நிற்கவே இல்லை. இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மாயமானார்கள். மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20), ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகியோர் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இவர்களை குக்கி ஆயுத கும்பல் கடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களை கடத்தி பிணைக்கைதி போன்று வைத்திருக்கும் தகவலும் பரவியது. இதையடுத்து சிபிஐ வசம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரித்து வந்த நிலையில் மாணவர்கள் 2 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தனர். இதனால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மக்கள் மீண்டும் போராட்டத்தை நடத்த தொடங்கினர். மாணவர்கள், போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது பள்ளி, கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் வழக்கு விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி பீரன் சிங் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‛‛மாயமான மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன என்பதை மாநில மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இந்த விசாரணையை இன்னும் விரைவுப்படுத்துவதற்காக சிபிஐ இயக்குனர் சிறப்பு குழுவுடன் சிறப்பு விமானத்தில் நாளை (அதாவது இன்று) இம்பாலுக்கு வருகிறார். இந்த நடவடிக்கை என்பது வழக்கை விரைந்து தீர்ப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது. மேலும் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications