பெட்ரோல் பங்க் உள்ளே எட்டிப்பார்த்த பண்ருட்டி போலீஸ்.. ஆடிப்போன கள்ளக்குறிச்சி! உடனே பாய்ந்த ஆக்ஷன்
கள்ளக்குறிச்சி: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்திருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 போ் உயிரிழந்துவிட்டனர்.. 229 போ் பாதிப்புக்குள்ளாகினர்.. இவர்களில் 150 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையிலும் மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாட்டையே உலுக்கியெடுத்த இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சிபிசிஐடி போலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
மெத்தனால்: மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை போலீஸார் கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது மாதேஷ், போலீஸாரிடம் தந்த வாக்குமூலத்தில், பண்ருட்டி அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்த சிபிசிஐடி போலீசார், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் உள்ள அந்த பெட்ரோல் பங்கிற்கு விரைந்தனர்.
ரசாயனம்: ஆனால், அந்த பெட்ரோல் பங்க் தற்போது பயன்பாட்டில் இல்லை.. எனினும், இந்த பெட்ரோல் பங்கிற்கு சென்ற போலீசார் அங்கு முழுமையான சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது பூமிக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில், 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.. இந்த மெத்தனால் உட்பட மேலும் சில ரசாயனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அந்த பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்துள்ளனர்..
இதையடுத்து, பெட்ரோல் பங்கிலுள்ள அனைத்து டேங்குகளையும் ஆய்வு செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கலெக்டர் அதிரடி: இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தில் ஈடுபட்ட பலரும் அடுத்தடுத்து கைதாகி வருவது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications