மதுரை - புதுச்சேரி பைப் வெடிகுண்டு வழக்கில் நக்சலைட் உட்பட மூவர் கைது
மதுரை: மதுரையில் தனியார் வணிகவளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட பைப் வெடிகுண்டு, மற்றும் புதுவையில் அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப்வெடிகுண்டு வைத்தது தொடர்பாக, தமிழ்த் தீவிரவாத நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 30 ல், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் புதுச்சேரி வீட்டில், ஒரு பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 11ல், மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள தனியார் வணிக வளாகத்திலும் போலீசார், ஒரு பைப் வெடிகுண்டைக் கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.

இந்த வெடிகுண்டுகளின் அருகே துண்டு பிரசுரங்களும் கிடைத்தன. அதில் தமிழக விடுதலைப்படை என்ற அமைப்பின் பெயர் இடம்பெற்றுள்ளது.இந்த பிரசுரங்களும், ஜனவரி 29ல் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்புப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை ரிங் ரோட்டில் திங்கட்கிழமை இரவு திருச்செல்வம் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவித்தனர்.
ஆனால், 18 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வரும் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வத்தை அவர் தங்கி இருந்த வீட்டிலேயே போலீசார் கைது செய்துள்ளனர் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பூவாச்சிப்பட்டியைச் சேர்ந்த இவர் மீது, ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து மேலூர் மன்கட்டி தெப்பக்குளம் பகுதியில், தேவகோட்டையை சேர்ந்த தங்கராஜ் என்கிற தமிழ் அரசன் 37 என்பவரையும், சிவகங்கை மாவட்டம் ஆந்தகுடியை சேர்ந்த கவியரசன் என்கிற ராஜாவையும் நேற்று இரவு வெடிகுண்டு வழக்கை கண்காணித்து வந்த சிறப்புப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து லேப்டாப், 5 செல்போன்கள், 2 கத்திகள், 2 மீட்டர் அளவில் குண்டு வைக்க பயன்படும் ஒயர்கள் உட்பட இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
தங்கராஜ், அரசு பள்ளி ஆசிரியையான அவரது சகோதரி வீட்டில் தங்கி இருந்துள்ளார். அதனால் போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள 3 நபர்களையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல கொலைகளில் தொடர்புடைய திருச்செல்வம்
போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் திருச்செல்வம், காரைக்குடி ஏரியாவில் பல கொலைகளை அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது. சாமிக்கண்ணு, இன்னாசி, அல்போன்ஸ், பாண்டியன் ஆகிய கொலை வழக்கில் தொடர்புடைய திருச்செல்வம் பைப் குண்டுகள் செய்வதில் நிபுணராம்.
சிறுவயதிலேயே தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட தொடர்பில் 1999ம் ஆண்டிலேயே தனது தந்தையுடன் தகராறு செய்த சாமிக்கண்ணு என்பவரை பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருச்செல்வம் இப்போது பைப் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications