சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 3 பேர் பலி.. ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சிவகாசி: பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ. ஜே நகரை சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமாக ஊராம் பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 25க்கும் மேற்பட்ட அறைகளில், நூற்றுக்கணக்கான ஆண்- பெண் தொழிலாளர்கள் பல்வேறு பட்டாசு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பூச்சட்டி மற்றும் தரை சக்கரம் போன்ற பட்டாசு ரகங்களுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப் பொருள்களில் வேதியியல் மாற்றம் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமாகி, அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி குமரேசன், 35 சுந்தர்ராஜ், 27 அய்யம்மாள், 70, இருளாயி 45 ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 2 ஆண் தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த அய்யம்மாள் முதலுதவி பெற்ற பின்பாக மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த இருளாயி சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த தொழிற்சாலையில் தீயணைப்பு படையினர், வருவாய் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் பள்ளபட்டியைச் சேர்ந்த காளியப்பன்,40 என்பவரை கைது செய்து, தலைமறைவாய் உள்ள உரிமையாளர் கடற்கரையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திரு. குமரேசன் த/பெ.சுப்புராஜ், திரு. சுந்தர்ராஜ் த/பெ.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி. அய்யம்மாள் க/பெ. கருப்பையா ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. இருளாயி க/பெ. சுந்தர்ராஜ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
