பட்டுக்கோட்டை ஆணவக்கொலை வழக்கு! அதிரடி காட்டும் போலீஸ்! கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேர் கைது
பட்டுக்கோட்டை: சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட இளம்பெண் பட்டுக்கோட்டையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கெனவே இளம்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள், ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19). அருகில் உள்ள பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19), என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இருவரும் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காதலித்து டிசம்பர் 31ல் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் காவல்துறை 18 வயது பூர்த்தி அடைந்துள்ள ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும் ஜனவரி 2ம் தேதி வலுக்கட்டாயமாகப் தம்பதிகளைப் பிரித்து பெற்றோருடன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அடுத்த நாள் (03.01.2024) அதிகாலையில் அவசர அவசரமாக அவரது உடலை எரித்துள்ளனர். நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள் மற்றும் ரோஜா கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நவீன் கூறுகையில்,
"நானும் ஐஸ்வரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு ஐஸ்வரியா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நான் பட்டியல் சமூகம், ஐஸ்வரியா மாற்று சமூகம் என்பதுதான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில்தான் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த விஷயம் எப்படியோ, ஐஸ்வரியாவின் வீட்டிற்கு கசிந்துவிட்டது.
எனவே வேறு வீடு மாறிவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டை கண்டுபிடித்து வந்த பல்லடம் போலீசார் ஐஸ்வரியாவை மட்டும் அழைத்து சென்றனர். என் மீது ஐஸ்வரியாவின் பெற்றோர் கடும் கோபத்துடன் இருப்பதாகவும், எனவே என்னை போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இருப்பினும் நான் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றேன். அங்கு, ஐஸ்வரியாவை அவரது தந்தை அவர அழைத்து சென்றுவிட்டார். பின்னர் நானும் வீடு திரும்பிவிட்டேன். ஆனால், அடுத்த நாள் காலை அவள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தின் மூலம் இக்கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். அதாவது, காதல் கணவர் நவீனிடமிருந்து, ஐஸ்வர்யாவை பிரித்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்திருக்கிறார். அதுபோல ஐஸ்வர்யாவின் பெற்றோர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஐஸ்வர்யாவின் உறவினர்கள் ரங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் என மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications